அவுஸ்திரேலிய விசா விண்ணப்பங்களைப் பரிசீலிப்பதற்கு எடுக்கும் காலப்பகுதி முன்னெப்போதும் இல்லாதவகையில் அதிகரித்துள்ள பின்னணியில், இதனை விரைவுபடுத்துவதற்குரிய நடவடிக்கைகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக அந்நாட்டு குடிவரவு அமைச்சர் Andrew Giles தெரிவித்துள்ளார்.
பல்லாயிரக்கணக்கில் தேங்கிக்கிடக்கும் விசா விண்ணப்பங்களை பரிசீலித்து, விரைவாக விசா வழங்கும் நடவடிக்கையை முன்னெடுக்குமாறு குடிவரவு திணைக்களத்திற்கு பணித்துள்ளதாக குடிவரவு, குடியுரிமை மற்றும் பல்கலாச்சார விவகாரங்களுக்கான அமைச்சர் Andrew Giles தெரிவித்துள்ளார்.
விசா வழங்கல் செயன்முறையை விரைவுபடுத்தும் நடவடிக்கைக்கு லேபர் அரசு முன்னுரிமையளிப்பதால், தேங்கிக்கிடக்கும் விண்ணப்பங்களைப் பரிசீலிப்பதற்கு அதிக ஊழியர்களை ஒதுக்குமாறு உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் Andrew Giles கடந்த வாரம் வெளியிட்டுள்ள ஊடகச்செய்தியில குறிப்பிட்டுள்ளார்.
விசா வழங்கும் நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதன் மூலம் skilled workers, மாணவர்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் என அதிகமான மக்கள் அவுஸ்திரேலியா வந்து பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கலாம் என்பதுடன் தொழிலாளர் பற்றாக்குறையை நிவர்த்திசெய்ய உதவலாம் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கிணங்க Travel exemption -பயண விலக்குகள் வழங்கும் நடவடிக்கைகளைக் கவனித்துவந்த அதிகாரிகள் உட்பட புதிதாக 140 அதிகாரிகள், மே 2022 முதல் விசா செயலாக்கப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் இதுதவிர குடிவரவுத் திணைக்கள அதிகாரிகள் கூடுதல் நேரம் வேலை செய்வதற்கான வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.
இதேவேளை ஒவ்வொரு நாளும் குடிவரவுத் திணைக்களத்திற்கு கிடைக்கும் புதிய விண்ணப்பங்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து வருவதாக அமைச்சர் Andrew Giles தெரிவித்துள்ளார்.
ஜூன் 2022 இல் பெறப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை மே 2022 ஐ விட 6.5 சதவீதம் அதிகம் என அமைச்சர் தெரிவித்தார்.
இந்நிலையில் ஜூன் 2022 தொடக்கத்தில் இருந்து 745,000 விசா விண்ணப்பங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன, இதில் 645,000 விண்ணப்பங்கள் வெளிநாடுகளிலிருந்து தாக்கல் செய்யப்பட்டவையாகும். குறிப்பாக 388,000 visitor விசாக்கள், 62,000 மாணவர் விசாக்கள் மற்றும் 9,550 temporary skilled விசாக்கள் இதில் அடங்குகின்றன.
விசா விண்ணப்ப பரிசீலனையை விரைவாக்குவதற்கு முன்னுரிமையளிக்கப்படுகின்றபோதிலும் தேங்கிக்கிடக்கும் விண்ணப்பங்களின் எண்ணிக்கையை ஒரே இரவில் குறைத்துவிட முடியாது என அமைச்சர் Andrew Giles வலியுறுத்தியுள்ளார்.
நன்றி - SBS தமிழ்