சட்டவிரோதமாக வௌிநாடு செல்ல முயற்சித்த 91 பேர் கைது!

சட்டவிரோதமாக வௌிநாடு செல்ல முயற்சித்த 91 பேர் கைது!

கடல் மார்க்கமாக சட்ட விரோதமாக வௌிநாடு செல்ல முயற்சித்த சந்தேகத்தின் பேரில் 91 பேர் நேற்றுமுன்தினம் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாரவில மற்றும் மேற்கு கடற்பிரதேசத்தில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடற்படையினர் மற்றும் மாரவில பொலிஸார் இணைந்து நேற்று முன்தினம் அதிகாலை இத்தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர். இதன்போது மாரவில விடுதியொன்றில் தங்கியிருந்த 13 ஆண்கள், ஒரு ஆண் குழந்தை, இச்சட்ட விரோத ஆட்கடத்தலில் ஈடுபட்ட நபர் உட்பட 9 தொடக்கம் 58 வயதுக்குட்பட்ட 15 பேர் மற்றும் இச்செயற்பாட்டுக்கு பயன்படுத்தப்பட்ட வேன் மற்றும் மோட்டார் வாகனம் என்பவற்றுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, திருகோணமலை மற்றும் மாரவில பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. மேலதிக விசாரணைக்காக இவர்கள் மாரவில பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல், மேற்கு கடற்பரப்பில் கடற்படையினர் கண்காணிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது மீன்பிடிப் படகொன்றில் வௌிநாடு செல்ல முற்பட்ட 58 ஆண்கள், 5 பெண்கள் மற்றும் 7 சிறுவர்களுடன் கடத்தலில் தொடர்புபட்ட 6 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் ஒன்று முதல் 62 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் இவர்கள் நீர்கொழும்பு, சிலாபம், புத்தளம், கல்பிட்டி, மாரவில, முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் திருகோணமலை ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என்று அடையாளங்காணப்பட்டுள்ளது. அவர்கள் மேலதிக விசாரணைக்காக கொழும்பு துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image