சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 38 பேர் கைது!
நீர்கொழும்பில் இருந்து சட்டவிரோதமாக படகுமூலம் அவுஸ்திரோலியாவுக்கு செல்ல முற்பட்ட 6 சிறுவர்கள், 6 பெண்கள் உள்ளடங்கலாக 38 பேரை தென்கிழக்கு கடற்பரப்பில் வைத்து கடற்படையினர் நேற்று (12) அதிகாலை கைது செய்துள்ளனர்.
இலங்கையின் தென்கிழக்கு கடற்பரப்பில் மேற்கொண்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக நாட்டிலிருந்து வெளியேற முயற்சித்ததாக சந்தேகிக்கப்படும் 38 பேர் கொண்ட மீன்பிடி படகொன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளது.
இலங்கை கடற்படையினர் 11 ஆம் திகதி நண்பகல் அம்பாறை ஒகந்த கடற்பரப்பில் மேற்கொண்டுள்ள தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான இலங்கையின் பல நாள் மீன்பிடிக் கப்பல் ஒன்றை அவதானித்து சோதனையிட்டனர்.
அப்போது, சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக இலங்கையில் இருந்து அவுஸ்திரேலியாவிற்கு வெளியேற முயற்சித்ததாக சந்தேகிக்கப்படும் மோசடியில் ஈடுபட்ட ஆறு பேர் (06) உட்பட 26 ஆண்கள், 05 பெண்கள் மற்றும் 07 சிறுவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பல நாள் மீன்பிடி கப்பலின் இயந்திரம் தொழில்நுட்பக் கோளாறாக உள்ளதுடன் மேலும் நீண்ட கடல் பயணத்திற்கு பொருத்தமற்றதாக இருந்தமை மேலதிக ஆய்வுகளின் போது தெரியவந்துள்ளது.
மேலும், கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 02 முதல் 60 வயதுடைய சந்தேகநபர்கள் யாழ்ப்பாணம், வவுனியா, வாழைச்சேனை, சிலாபம், கல்பிட்டி, உடப்புவ, ஜா-எல மற்றும் நீர்கொழும்பு ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பாணம பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.