ஓமானில் இலங்கை பெண்கள் துன்புறுத்தல் விவகாரம் - தூதரக அதிகாரியின் கடவுச்சீட்டு ரத்து!

ஓமானில் இலங்கை பெண்கள் துன்புறுத்தல் விவகாரம் - தூதரக அதிகாரியின் கடவுச்சீட்டு ரத்து!

ஓமானில் உள்ள இலங்கை தூதரகத்தின் மூன்றாவது செயலாளர் இ.குஷானின் இராஜதந்திர கடவுச்சீட்டு ரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

வீட்டுப் பணியாளர்களாக வெளிநாட்டு வேலை தேடும் இலங்கைப் பெண்களை சுற்றுலா விசாவில் ஓமானுக்கு அனுப்பி, பின்னர் பாலியல் கடத்தலுக்கு பயன்படுத்திய மனித கடத்தல் மோசடியில் குறித்த அதிகாரி ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குறித்த அதிகாரி பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகளுக்காக இலங்கை வந்தவுடன் அவர் கைது செய்யப்படுவார் எனவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார அண்மையில் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இதற்கிடையில், ஓமானில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் தற்போது பணிநீக்கம் செய்யப்பட்ட அதிகாரிக்கு எதிராக இந்த ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், எனினும் அது தொடர்பான தீர்மானம் தாமதமாகி வருவதாகவும் பொதுக் கணக்குகளுக்கான குழு (COPA) செவ்வாய்கிழமை தெரிவித்தது.

குழு கூட்டத்தில், கூடுதல் தலைமை கணக்காய்வாளர் கடந்த பெப்ரவரி மாதம் 28ம் திகதி வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் முன்னாள் தலைவர் குறிப்பிட்ட இந்த அதிகாரி தொடர்பில் உள்ளக கணக்காய்வு பிரிவின் ஊடாக விசாரணை நடத்துமாறு கோரியுள்ளதாக பி.எல்.கே பெரேரா சுட்டிக்காட்டினார்.

இந்த உத்தியோகத்தர் தொடர்பில் நிதி மோசடி, சான்றிதழ் மோசடி போன்றவை பதிவாகியுள்ளதாக மேலதிக கணக்காய்வாளர் நாயகம் மேலும் சுட்டிக்காட்டினார்.

இதனால், இந்த நபர் தொடர்ந்தும் பதவியில் இருந்தால் விசாரணைகள் தடைபடலாம் என்பதால், அவரை உடனடியாக இலங்கைக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் முன்னாள் தலைவர் கடந்த பெப்ரவரி மாதம் அமைச்சிடம் கோரிக்கை விடுத்திருந்தமை தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் ஊடகங்களில் இந்தளவு வௌியாகும் வரையில் நடவடிக்கை எடுக்காததற்கு குழு கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியது.

கடந்த பெப்ரவரி மாதம் 28ம் திகதிஅன்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் முன்னாள் தலைவரின் வேண்டுகோளுக்கு இணங்க, இந்த அதிகாரியிடம் உள்ளக கணக்காய்வு பிரிவின் ஊடாக விசாரணை நடத்தப்பட்டதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

எனினும், குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்த முடியவில்லை. ஓமான் தூதுவரிடமிருந்து அறிக்கை கோரப்பட்டு, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் இருந்து பெறப்பட்ட விசாரணை அறிக்கையின் அடிப்படையில் நவம்பர் 4ஆம் திகதி குறித்த அதிகாரியை பணி இடைநிறுத்த நடவடிக்கை எடுத்ததாக பணிப்பாளர் நாயகம்  தெரிவித்தார்.

 

 

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image