ருமேனியா புலம்பெயர் இலங்கையர்களுக்கும் அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு

ருமேனியா புலம்பெயர் இலங்கையர்களுக்கும் அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு

ருமேனியாவில் பணியாற்றும் புலம்பெயர் இலங்கையர்கள் எதிர்நோக்கும் பிரச்சினை தொடர்பில் தொழில் மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்கும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று நேற்று (30) இடம்பெற்றது.

zoom தொழில்நுட்பத்தினூடாக இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் புலம்பெயர் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுத்தருவதாக அமைச்சர் உறுதியளித்தார்.

ருமேனியாவில் பணியாற்றும் இலங்கையர்களுடைய சேவை ஒப்பந்தத்தில் உள்ள பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவது தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

புலம்பெயர் தொழிலாளர்கள் சட்டரீதியாக மாதாந்தம் 500 டொலர் நிதியை வங்கிகளினூடாக அனுப்பினால் நாட்டு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என்று இதன் போது அமைச்சர் சுட்டிக்காட்டினார், ஏற்கனவே புலம்பெயர் தொழிலாளர்கள் வங்கிகளினூடாக டொலர் அனுப்புவதாகவும் இலகுவாக பணம் அனுப்பும் வகையில் அந்நாட்டில் இலங்கை வங்கியின் கிளையினை அங்கு திறக்குமாறு புலம்பெயர் தொழிலாளர்கள் தெரிவித்தனர். அதற்கான சாதகமான செயற்பாட்டை முன்னெடுப்பதாக அமைச்சர் உறுதியளித்தார்.

கடந்த வாரம் ருமேனிய தூதுவருடன் கலந்துரையாடிய அமைச்சர், அடையாளங்காணப்பட்ட பிரச்சினைகள் குறித்து புலம்பெயர் தொழிலாளர்களை தௌிவுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளார்.

தொழிலை மாற்றும் போது ஆட்கடத்தற்காரர்களிடம் சிக்கி விடக்கூடாது என்றும் அந்நாட்டு சட்டத்திற்கேற்ப செயற்படுவதனூடாக மென்மேலும் தொழில்வாய்ப்புக்களை பெற முடியும் என்றும் இதன்போது அமைச்சர் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image