வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான தடைகளை நீக்கி, பல்நோக்கு திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட எந்தவொரு அரச உத்தியோகத்தர் அல்லது ஊழியரையும் வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்வதற்கான வாய்ப்பை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு வேலை வாய்ப்புச் சந்தைகளுக்கு திறன்மிக்க பணியாளர்களை வழிநடத்தும் வேலைத்திட்டத்தின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்காக கடந்த 25ஆம் திகதி ஜனாதிபதியினால் கூட்டப்பட்ட கலந்துரையாடலின் முடிவில் அவர் இதனைத் தெரிவித்தார்.
ஜப்பான், போலந்து, ருமேனியா உள்ளிட்ட நாடுகளில் பல்வேறு துறைகளில் திறமையான தொழிலாளர்களுக்கு பல வேலை வெற்றிடங்கள் காணப்படுவதாகவும், அதற்கான வாய்ப்புகளை இலக்காகக் கொண்டு மொழி மற்றும் தொழில் பயிற்சி திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி அவர்கள் இக்கலந்துரையாடலின் போது சுட்டிக்காட்டினார். .
தற்போதைய பொருளாதார வீழ்ச்சிக்கு முகங்கொடுத்து அந்நிய செலாவணி மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டுமென சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, திறமையான பணியாளர்களை உற்பத்தி செய்வதன் மூலம் அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும் எனவும் தெரிவித்தார்.