அடுத்த சில வாரங்களில் பாதி ஐரோப்பா கொரோனாவால் பாதிக்கப்படும்' - உலக சுகாதார நிறுவனம்

அடுத்த சில வாரங்களில் பாதி ஐரோப்பா கொரோனாவால் பாதிக்கப்படும்' - உலக சுகாதார நிறுவனம்

அடுத்த ஆறு முதல் எட்டு வாரங்களுக்குள் ஐரோப்பாவின் பாதி மக்கள் தொகை ஒமிக்ரான் கோவிட் திரிபினால் பாதிக்கப்படுவார்கள் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

டெல்டா திரிபின் பரவலுக்கும் மேல், ஒமிக்ரான் "மேற்கிலிருந்து கிழக்கே எழும்பும் அலையாக" இந்தப் பகுதி முழுவதும் பரவுகிறது என்று உலக சுகாதார நிறுவனத்தின் ஐரோப்பிய பிராந்தியத்துக்கான இயக்குநர் மருத்துவர் ஹான்ஸ் க்ளூஜ் கூறினார்.

2022-ஆம் ஆண்டின் முதல் வாரத்தில் ஐரோப்பா முழுவதும் 70 லட்சம் பேருக்கு தொற்று உண்டாகியுள்ளதன் அடிப்படையில் இந்தக் கணிப்பு செய்யப்பட்டுள்ளது.

இரண்டு வார காலத்தில் நோய்த் தொற்றுகளின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.

2021-ஆம் ஆண்டின் கடைசி வரை அனைத்து நாடுகளும் டெல்டா திரிபைச் சமாளித்துக் கொண்டிருந்தன. தற்போது அதைவிட அதிகமாக, தற்போது ஒமிக்ரான் திரிபு ஒரு புதிய மேற்கிலிருந்து கிழக்கே பரவும் அலையை உருவாக்கி வருகிறது," என்று மருத்துவர் க்ளூஜ் ஒரு செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

மேலும், சியாட்டிலில் உள்ள சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீட்டிற்கான நிறுவனம் முன்னறிவித்துள்ளதாக மேற்கோள் காட்டியவர், "அடுத்த ஆறு முதல் எட்டு வாரங்களில் இப்பகுதியில் உள்ள 50 விழுக்காட்டிற்கும் அதிகமான மக்கள் ஒமிக்ரானால் பாதிக்கப்படுவார்கள்," என்றார்.

மேற்கத்திய நாடுகளில் இருந்து பால்கன் பகுதிகளுக்கு வைரஸ் பரவுவதால் ஐரோப்பிய மற்றும் மத்திய ஆசிய நாடுகள், "தீவிர அழுத்தத்தில்" இருப்பதாகவும் அவர் கூறினார்.

அதோடு, "தொற்றுநோயியல் நிலைமையைப் பொறுத்து ஒவ்வொரு நாடும் இப்போது எப்படி எதிர்செயலாற்றுகின்றன, கைவசம் இருக்கக்கூடிய வளங்கள், தடுப்பூசி போடுவது மற்றும் சமூக-பொருளாதார சூழல் ஆகியவை குறித்து தெரிவிக்கப்பட வேண்டும்," என்றும் கூறினார்.

முந்தைய கொரோனா திரிபுகளைவிட ஒமிக்ரான் மக்களைக் கடுமையாக நோய்வாய்ப்படுத்தும் வாய்ப்பு குறைவு என்று சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால், ஒமிக்ரான் அதீத பரவும் தன்மை உடையது. முழுமையாக தடுப்பூசி போட்டிருந்தாலும் கூட மக்களைப் பாதிக்கலாம்.

பிபிஸி தமிழ்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image