பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையம் எதிர்வரும் 21ம் திகதி திறக்கப்படவுள்ளது. இந்நிலையில் 7 விமானசேவைகள் தமது சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது என்று உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எமிரேட்ஸ், கட்டார் எயார்லைன்ஸ், எடிஹாட், துருக்கி எயார்லைன்ஸ், சிங்கபூர் எயார்லைன்ஸ், குவைத் எயார்லைன்ஸ் மற்றும் ஓமான் எயார்லைன்ஸ் ஆகியனவே தமது சேவை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளன.
எனினும் குறித்த விமானசேவைகள் தமது விமானசேவைக்கான கால அட்டவணையை இன்னும் தயாரிக்கவில்லையெனவும் எதிர்வரும் வாரங்களில் விமானசேவைக்கான கால அட்டவணையை அந்நிறுவனங்கள் தயாரிக்கும் என தாம் எதிர்பார்ப்பதாக இலங்கை சிவில் விமானசேவைகள் அதிகாரசபை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது நிலவும் கொவிட் 10 தொற்று பரவல் காரணமாக குறைவான சேவைகளே இடம்பெறும். இலங்கைக்கு செல்வதற்கும் இலங்கையிருந்து செல்வதற்கும் அதிகரிக்கும் கேள்விக்கு அமைய சேவைகள் அதிகரிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்ற.
சுகாதார அறிவுறுத்தல்களுக்கமைய வர்த்தக சேவைகள் மற்றும் சுற்றுலாப்பிரயாணிகளுக்காக விமானநிலையம் 21ம் திகதி திறக்கப்படவுள்ளதாக அரசாங்கம் கடந்த 5ம் திகதி அறிவித்திருந்தது.
மேலதிகமாக, உக்ரேனிய கொடி கேரியர், உக்ரைன் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் மற்றும் விசேட ஸ்கைஅப் ஏர்லைன்ஸ் ஆகியவை தொடர்ந்து சுற்றுலாப் பயணிகளை அழைத்து வரும், அதே நேரத்தில் இந்தியாவின் இண்டிகோ மற்றும் மாலத்தீவு ஏர்லைன்ஸும் சேவைகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சுற்றுலாப்பயணிகள் வருகைக்காக நாட்டின் எல்லையை திறக்க இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் கடந்த திங்கட்கிழமை சுற்றுலாத்துறையுடன் தொடர்புபட்டவர்களுக்கு சுகாதார வழிகாட்டல்கள் மற்றும் அறிவுறுத்தல்கள் தொடர்பான செயற்பாடு ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இவ்வருடம் 1.5 மில்லியன் சுற்றுலாப்பிரயாணிகளை கவர்ந்திழுக்க எதிர்பார்த்துள்ளதாக சுற்றுலத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கடந்த வாரம் தெரிவிருந்தமை குறிப்பிடத்தக்கது.