Online கற்றலில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு அரசாங்கம் முன்வைக்கும் தீர்வு
கொரோனா பரவல் காரணமாக, முறைப்படுத்தப்பட்ட தொலைக்கல்வி முறையில் கற்றல் நடவடிக்கையில் ஈடுபட முடியாத மாணவர்களுக்காக, கிராமிய கற்றல் மையங்களை அமைப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
அரச தகவல் திணைக்களத்தில் அண்மையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில், கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.
தொலைக்கல்வி முறைமைக்கான வசதிகள் இல்லாத மாணவர்களுக்கு, பிரதேச கற்றல் மையங்களை அமைக்குமாறு, அனைத்து மாகாண கல்வி பணிப்பாளர்களுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் சிறு குழுக்களாக இணைந்து இந்த மையங்களில் கற்றல் நடவடிக்கையில் ஈடுபட முடியும்.
இதற்கமைய, குறித்த கற்றல் மையங்களை கிராமிய மட்டங்களில் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கை கல்வி அமைச்சினால் திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார.
இதேவேளை, குறித்த ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்துள்ள அமைச்சர்
நாமல் ராஜபக்ஷ,
தொலைத்தொடர்பு வசதிகள் இல்லாத நாட்டின் கிராமிய பிரதேசங்களை அடையாளம் கண்டு அந்தப் பகுதி வெளியில் தொலைத்தொடர்பு வசதிகள் கிடைக்கப்பெறும் இடத்தில் கற்றல் மையங்களை நிறுவ நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இரண்டு வாரங்களுக்குள் அவ்வாறான இடங்களை அடையாளம் கண்டு அவற்றுக்கு அவசியமான கணினி அல்லது டெப் கருவிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. ஒவ்வொரு இடத்திற்கும் 10 கணினிகள் அல்லது டெப் கருவிகளை வழங்குவதற்கு நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.
இதன் மூலம் காலை முதல் மாலை வரை இ தக்சலாவ மூலமாக மாணவர்கள் கற்றல் நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு சந்தர்ப்பம் வழங்க எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த கற்றல் மையங்களுக்கு கற்றல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக டேட்டாவை வழங்குவதற்கு ஏதாவது செலவு ஏற்படுமாயின் அதனை தாங்கள் ஏற்றுக் கொள்ள எதிர்பார்ப்பதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.