32 இலங்கை கைதிகள் விடுவிப்பு: மேலும் 72 பேர் குவைத்தில் சிக்கியுள்ளனர்
குவைத்தில் தண்டனை அனுபவித்து வரும் 104 இலங்கை கைதிகளில் 32 பேர் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
இவர்கள் நேற்று (25) பிற்பகல் குவைத்தில் இருந்து விசேட விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
இந்த கைதிகள் குவைத் மத்திய சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தாக தெரிவிக்கப்படுகின்றது.
குவைத் அரசுக்கும், இலங்கை அரசுக்கும் இடையில் 2007 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ் குறித்த கைதிகள் இலங்கைக்கு அனுப்பப்பட்டனர்.
குறித்த கைதிகள், குவைத்தில் போதைப்பொருள் பாவனை, வர்த்தகம், கடத்தல் மற்றும் கொண்டுசெல்லல் ஆகிய குற்றச்சாட்டின் பேரில் அந்நாட்டு பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு குற்றவாளிகளாகக் காணப்பட்டவர்களாவர்.
குறித்த கைதிகளுடன் குவைத் அரசின் பாதுகாப்பு அதிகாரிகள், அந்நாட்டு உள்துறை அமைச்சின் அதிகாரிகள், வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் அடங்கிய குழுவும் இலங்கை வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குவைத் விமானப்படைக்கு சொந்தமான விமானம் நேற்று (25) மாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததையடுத்து, இலங்கை சிறைச்சாலைகள் திணைக்கள அதிகாரிகள் குழு, அந்தக் கைதிகளை பொறுப்பேற்றுள்ளனர்..
இதனையடுத்து, குறித்த கைதிகள் குழு வெலிக்கடை சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்..