சட்டவிரோத E8 விசாவினால் சட்டரீதியான E9 தொழில் ஆபத்தில்!
E-9 விசா பிரிவு தொழில்வாய்ப்பு விடயத்தில் இலங்கை அரசாங்கத்திற்கும் கொரிய அரசாங்கத்திற்கும் இடையில் சுமார் 20 ஆண்டுகால தொடர்பு உள்ளதாக இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கோசல விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பணியகத்தில் இன்று (25) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்
தென்கொரிய E-8 பிரிவு விசாவானது, ஒரு பருவ கால தொழில் முறை விசாவாக உள்ளது. அது இலங்கையில் இருந்து தொழிலாளர்களை வெளிநாட்டுக்கு அனுப்புவதற்கு அவசியமான உரிய நடைமுறைகள் பின்பற்றப்பட்ட விசா முறைமை அல்ல.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், எந்த தனியார் முகவர்களுக்கோ அல்லது தனியார் குழுவினருக்கோ E-8 முறைமையின் கீழ் தொழிலாளர்களை வெளிநாட்டுக்கு அனுப்புவதற்கு எந்த வகையிலும் அனுமதி வழங்கவில்லை
E-9 விசா பிரிவு தொழில்வாய்ப்பு விடயத்தில் இலங்கை அரசாங்கத்திற்கும் கொரிய அரசாங்கத்திற்கும் இடையில் சுமார் 20 ஆண்டுகால தொடர்பு உள்ளது,.
இந்த E-9 விசாவைப் பயன்படுத்தி வருடாந்தம் பயிற்றுவிக்கப்பட்ட சுமார் 7000 அல்லது 8000 தொழிலாளர்கள் கொரியாவுக்கு செல்கின்றனர். சுமார் 30,000 தொழிலாளர்கள் அந்த நாட்டில் இருக்கின்றனர்.
E-8 பிரிவு பருவகால விசா முறைமின் கீழ் சென்றால் அங்கு தாம் உழைக்கும் பணத்தை விடவும், இலங்கையில் உள்ள முகவர்களுக்கு 12 இலட்சம் ரூபா அளவில் வழங்க வேண்டிய உள்ளது. அதாவது ஐந்து மாதம் சென்ற பின்னர் நீங்கள் அங்கிருந்து தப்பிவிடலாம் என அந்த இடைத் தரகர்கள் பொதுமக்களுக்கு கூறி இந்த மோசடி நடவடிக்கையை முன்னெடுக்கின்றனர்.
இந்த நிலையில், E-9 விசா பிரிவின் கீழ் தொழில் வாய்ப்பு வழங்கும் கொரிய தரப்பின் தரப்பினர் அண்மையில் என்னை சந்தித்தனர்.
அதாவது E-8 விசா பிரிவின் கீழ் இலங்கை தொழிலாளர்கள் அங்கு வந்து அங்கு தப்பிச்செல்ல முயற்சித்தால், அது E-9 விசா பிரிவின் கீழ் வழங்கப்படுகின்ற கோட்டா எண்ணிக்கையை குறைப்பதில் தாக்கம் செலுத்தும் என அவர்கள் கூறியிருந்தனர்.
எனவே அந்த பாதிப்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் என்று நாம் கூறுகின்றோம். - என்றார்.