உலகளாவில் நாளாந்தம் 140 பெண்கள் கொல்லப்படுகிறார்கள்: அதிர்ச்சி அறிக்கை
கடந்த ஆண்டு ஒரு நாளைக்கு சராசரியாக 140 பெண்கள் மற்றும் சிறுமிகள் தங்களது இணையர் அல்லது குடும்ப உறுப்பினர்களால் கொல்லப்பட்டதாக ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் ஒரு பெண் கொலைசெய்யப்படுகிறார்.
மேலும், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு வீடுதான் மிகவும் ஆபத்தான இடமாக மாறியுள்ளது எனவு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் நவம்பர் 25 ஆம் தேதி ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில்,பெண்கள் கொல்லப்பட்டது தொடர்பான தகவல் ஐ.நா. கிளை அமைப்புகளான ஐ.நா., பெண்கள் மற்றும் ஐ.நா.வின் போதைப்பொருள், குற்றச்செயல்கள் தடுப்பு அமைப்பு சார்பில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: அனைத்து இடங்களிலும் உள்ள பெண்களும், சிறுமிகளும் பாலின அடிப்படையிலான வன்முறையால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு வீடுதான் மிகவும் ஆபத்தான இடமாக மாறியுள்ளது. கடந்த ஆண்டு ஒரு நாளைக்கு சராசரியாக 140 பெண்கள், சிறுமிகள் தங்களது இணையர் அல்லது குடும்ப உறுப்பினர்களால் கொல்லப்பட்டுள்ளனர். உலகளவில், 2023 ஆம் ஆண்டில் தோராயமாக 51,100 பெண்கள், சிறுமிகளின் உயிரிழப்புக்கு இணையர் அல்லது உறவினர் காரணமாக இருந்துள்ளனர். 2022 ஆம் ஆண்டில் 48,800 பேர் கொல்லப்பட்டனர்.
ஆப்பிரிக்காவில் 2023 ஆம் ஆண்டில் 21,700 பேர் தங்களது இணையர் மற்றும் உறவினரால்கொல்லப்பட்டுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. ஆப்பிரிக்கா மக்கள்தொகையின் அளவோடு ஒப்பிடும்போது அதிக எண்ணிக்கையிலானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதாவது 100,000 பேருக்கு 2.9 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு அமெரிக்காவில் 100,000 க்கு 1.6 பெண்களும், ஓசியானியாவில் 100,000 க்கு 1.5 பெண்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆசியாவில் 100,000 பேருக்கு 0.8 பேர் மற்றும் ஐரோப்பாவில் 100,000 பேர் 0.6 பேர் என விகிதங்கள் கணிசமாகக் குறைந்தது. மேலும், 2023 ஆம் ஆண்டில் குடும்பத்துக்குள் நடந்த கொடிய வன்முறை ஆண்களை விட பெண்களையே அதிகம் பாதித்துள்ளது. மாற்றுத் திறனாளி பெண்கள் மற்றும் வயதான பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் இருந்து அவர்களை பாதுகாக்க அதிக கவனம் செலுத்துமாறு உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
பெண்கள் மற்றும் சிறுமிகள் கொல்லப்படுவதைத் தடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், அவர்கள் அதிக அளவில் கொல்லப்படுகின்றனர். அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.