EPF உட்பட நிதியங்களுக்கு 25 வீத வரி - கடுமையாக எதிர்க்கும் ஊழியர் மத்திய நிலையம்
ஊழியர் சேமலாப நிதியம் உட்பட சேவை நிதியங்களுக்கு அரசாங்கத்தின் 25 வரி விதிப்புக்கு கடுமையாக எதிர்ப்புத் தெரிவிப்பதாக தனியார்துறை ஊழியர் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
தனியார்துறை ஊழியர் மத்திய நிலையத்தின் தலைவர் துமிந்த நாகமுவ மற்றும் செயலாளர் ரொஷேன் ஷமீர ஆகியோருடைய கையெழுத்துடன் தொழில் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவுக்கு நேற்று முன்தினம் (08) அனுப்பியுள்ள கடிதத்தில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போதைய அரசாங்கம் 2022ம் ஆண்டுக்காக முன்வைத்த வரவுசெலவு முன்மொழிவுக்கமைவாக 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதலாம் திகதி தொடக்கம் ஆரம்பமாகும் நிதியாண்டுக்காக 2 பில்லியனுக்கும் அதிகமாக இலாபம் சம்பாதிக்கும் நிறுவனங்களுக்கு ஒரு முறை மாத்திரம் 25 வீதம் வரி அறவிடக்கூடிய விசேட வரியை முன்மொழிந்திருந்தது. அந்த வரவுசெலவு முன்மொழிவுக்கமைவாக தயாரிக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கமைவாக ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம், ஓய்வூதிய கொடுப்பனவு நிதியம் போன்ற இந்நாட்டு உழைக்கும் வர்க்கத்தினருடைய நிதியத்திடமிருந்து 25 வீத வரியை அறவிட அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இத்தீர்மானத்திற்கு எதிராக எமது கடுமையான எதிர்ப்பை தெரிவித்துக்கொள்கிறோம். அத்துடன் உழைக்கும் வர்க்கத்தினருடைய நிதியத்தை கொள்ளையிடுவதற்காக அரசாங்கம் கொண்டு வந்துள்ள தீர்மானத்தை நிறுத்தும் வரை தனியார் மற்றும் அரச ஊழியர்களை ஒன்று திரட்டி தொடர்ச்சியான எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாகவும் தனியார்துறை ஊழியர் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
மேலும், இதற்கு முன்னரும் உழைக்கும் வர்க்கத்திற்கு சொந்தமான நிதியினை கொள்ளையடிக்க பல்வேறு திட்டங்களை தீட்டியபோதிலும் தொடர்ச்சியான போராட்டங்களினால் அத்திட்டங்கள் முறியடிக்கப்பட்டன என்பதை இந்நேரம் நினைவூட்டிகிறோம். அரசாங்கத்தின் இவ்விசேட வரிவிதிப்பினூடாக ஊழியர் சேமலாப நிதியத்தில் இருந்து 65 பில்லியன் ரூபா கொள்ளையடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தனியார், அரச ஊழியர்கள் பல ஆண்டுகாலமாக சேமித்த நிதியை இவ்வாறு கொள்ளையடிக்க திட்டமிடுவதானது தொழில் அமைச்சர் என்றவகையில் நீங்கள் வெட்கப்படவேண்டிய விடயமாகும்.
அத்துடன் இந்த முன்மொழிவினூடாக தனியார்துறையினர் ஆண்டுதோறும் பெற்றுவந்த போனஸ் தொகையில் இருந்தும் ஒரு பகுதியை அரசாங்கம் கொள்ளையடிக்க எதிர்பார்த்துள்ளது. நிறுவன உரிமையாளர்களின் இலாபத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை வரியாக அறவிடுவதில் எமக்கு ஆட்சேபனை இல்லை. எனினும் ஊழியர்களுக்கு சொந்தமான நிதி மற்றும் போனஸ் தொகையை கொள்ளையிட எடுக்கும் முயற்சிக்கு நாம் கடுமையான கண்டனத்தை தெரிவிக்கிறோம்.
தற்போதைய தொழில் அமைச்சர் என்றவகையில் ஊழியர் சேமலாப நிதியத்தை கொள்ளையடிக்க பங்களிப்பு வழங்கியவர் என்று வரலாற்றில் பேசும் வகையில் நடந்துகொள்ளாமல் குறித்த முன்மொழிவை ரத்து செய்யுமாறு நாம் அழுத்மாக தெரிவிக்கிறோம். அவ்வாறு இல்லையேல் கடுமையான எதிர்ப்புக்கு முகங்கொடுக்க அமைச்சர் உட்பட அரசாங்கம் தயாராக இருக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம் என்று என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.