நாட்டில் B.1.1.7 உட்பட பல்வேறு புதிய திரிபடைந்த கொவிட் 19 வைரஸ்கள்
தற்போது இலங்கையில் காணப்படும் புதிய கொவிட் 19 வைரஸ்களில் B.1.1.7 உட்பட பல்வேறு புதிய திரிபடைந்த வைரஸ்கள் காணப்படுகின்றன என்று இலங்கை சுகாதார மேம்பாட்டுப் பணியகம் அறிவித்துள்ளது.
வைரஸ் தொற்றுநோய்களானது காலப்போக்கில் அதன் தோற்றத்தில் மாற்றமேற்படுத்தும் சிறப்புத்தன்மை வாய்ந்தாக காணப்படுகிறது. ஒரு வைரஸில் ஒரு புரதத்தில் ஏற்படும் மாற்றம் கூட அதன் நடத்தையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும். இத்தகைய மாற்றங்கள் வைரஸ் பரவுவதை துரிதப்படுத்தக்கூடும். இது வைரஸ் தொற்றுநோயால் ஏற்படும் நோயின் தீவிரத்தை அதிகரிக்கும் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதனால் தொற்று வேகமாக பரவுவதுடன் கடுமையான அறிகுறிகளை காட்டக்கூடும்.
சனநெரிசல் மிகுந்த பகுதிகள், ஏனைய நபர்களுடன் நெருங்கிப்பழகுதல் மற்றும் மூடிய இடங்கள் என்பன தொற்று பரவும் அபாயம் உள்ளதாக காணப்படுகிறது.
அடிக்கடி விவாதிக்கப்படாவிட்டாலும், மூடப்பட்ட இடங்களில் இருப்பது கொவிட் பரவலுக்கு முக்கிய காரணமாக அமைகிறது. மேற்கூறப்பட்ட மூன்று விடயங்களும் கொவிட் பரவலை மிக வேகமாக பரவ காரணமாகிறது. மேற்கூறப்பட்ட காரணிகளில் ஒன்றுக்கு மேற்பட்டவை இருக்குமாயின் பரவில் பன்மடங்கு அதிகரிக்கும்.
தவிர்க்க முடியாத காரணங்களினால் குறித்த இடங்களுக்கு செல்லவேண்டியேற்படின் அங்கு செலவழிக்கும் நேரத்தை குறைத்துக்கொள்வதனூடாக தொற்று ஆபத்தை குறைக்க முடியும். அதிகமாக பரவும் ஆபத்துள்ள காலப்பகுதில் தவிர்க்க வேண்டிய காரணிகள் அதாவது மூடப்பட்ட, அதிக சனநெருக்கடியுள்ள இடங்களை முற்றாக தவிர்ப்பது சிறந்தது என்று சுகாதார மேம்பாட்டுப் பணியகம் பொது மக்களை அறிவுறுத்தியுள்ளது.