60,000 பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பை முழுமைப்படுத்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை

60,000 பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பை முழுமைப்படுத்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை

60,000 பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளமை அப்பட்டமான பொய்யாகும். குறித்த எண்ணிக்கையில் 8,000 இற்கும் அதிகமானோருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படவேண்டியுள்ளது.

எனவே, அந்த வேலைவாய்ப்புகளை வழங்க வேண்டும் என 2020 வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் மற்றும் ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் என்பன் இணைந்து கோரிக்கை விடுத்துள்ளன.

2020 வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் மற்றும் ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் இணைந்து நேற்று (21) பொரளை என்.எம். பெரேரா மன்டபத்தில் ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தியது. இதன்போது கருத்து தெரிவித்த ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் இணைப்பாளர் தென்னே ஞானாநந்த தேரர்,

பட்டதாரிகளின் பிரச்சனை நிறைவுக்கு வந்துள்ளதாக அரசாங்கம் பிரச்சாரம் மேற்கொள்கின்றது. கடந்த நாடாளுமன்ற அமர்வு ஒன்றின்போது பதிலளித்து உரையாற்றிய அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல 60,000 பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். அது அப்பட்டமான பொய்யாகும்.

கடந்த செப்டம்பர் 2ம் திகதியும் பெப்ரவரி முதலாம் திகதியும் 51,693 பேரளவில் இணைக்கப்பட்டுள்ளனர். எனவே 60,000 முழுமை அடைவதற்கு இன்னும் 8,300 அளவிலான நியமனங்கள் வழங்கப்பட வேண்டியுள்ளன.

எனவே 2020ஆம் ஆண்டு பட்டம் பெற்று வெளியேறிய வேலையற்ற பட்டதாரிகளுக்கு அந்த நியமனங்களை வழங்குமாறு நாம் கோரிக்கை விடுக்கின்றோம். 11 பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்ற 5,460 பேரளவில் தற்போது வரையில் நாங்கள் அடையாளம் கண்டு இருக்கின்றோம். இதேநேரத்தில் 2019 டிசம்பர் 31 வரையில் நியமனம் வழங்கப்;பட்டவர்களில், அரசாங்க சேவை அமைச்சு அறிவித்ததன் அடிப்படையில் மேலும் 300 பேரளவானோருக்கு நியமனங்கள் வழங்கப்பட வேண்டியுள்ளன. எனவே இவை அனைத்தையும் நிறைவு செய்ய வேண்டும் என்பதே எங்களுடைய கோரிக்கையாக இருக்கின்றது. 

இந்த 60,000 தொழில் வாய்ப்பை முழுமைப்படுத்துவதற்கு மேலும் 8,300 அளவிலான தொழில் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டியுள்ளன.  அதற்கான நிதி ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும், அனைத்து பணிகளும் நிறைவடைந்து உள்ளதாகவும் அமைச்சர் கூறியிருந்தார்.  எனவே இந்த எண்ணிக்கையில் 5,460 பேருக்கு தொழில் வாய்ப்பை வழங்குவதற்காக அரச சேவை அமைச்சுடன் கலந்துரையாடி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.  எவ்வாறு இருப்பினும் இந்த பிரச்சினை தொடர்பில் கடிதம் வழங்கினாலும், பேச்சுவார்த்தை நடத்தினாலும் அது தீர்க்கப்படாவிட்டால் எங்களுக்கு மீண்டும் வீதிக்கு இறங்க வேண்டிய நிலை ஏற்படும். நாங்கள் வீதிக்கு இறங்கும் சந்தர்ப்பத்தில் கொரோனா சட்டங்களைக்கூறி எங்களை கட்டுப்படுத்த வரவேண்டாம். அதற்கு நாங்கள் இணங்க மாட்டோம். - என்றார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image