வீட்டுத் திட்டத்தை முழுமைப்படுத்தி தருமாறு பொதுமக்கள் போராட்டம்
தமக்கான வீட்டுத் திட்டத்தை விரைவில் முழுமைப்படுத்தி தருமாறு வலியுறுத்தி, மஸ்கெலியா, பிரவுன்ஸ்வீக் தோட்டத்தில் குயின்ஸ்லேன்ட் பிரிவிலுள்ள பயனாளிகள் இன்று (21) கனவயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குயின்ஸ்லேன்ட் தோட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி கோஷங்களை எழுப்பியவாறு, பதாதைகளை ஏந்தியவண்ணம் சுமார் ஒரு மணித்தியாலயம் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
அரசியல் என்பது மக்களுக்கானது, எனவே, எந்த தரப்பு ஆட்சிக்கு வந்தாலும் கட்சி பேதங்களுக்கு அப்பால் மக்களுக்கான சேவைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
நல்லாட்சி அரசாங்கத்தில் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சராக பதவி வகித்த பழனி திகாம்பரம் தலைமையில் 2018 ஒக்டோபர் 7 ஆம் திகதி பிரவுன்ஸ்வீக், குயின்ஸ்லேன்ட் பிரிவில் 40 தனி வீடுகளை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.
அதன்பின்னர் நிர்மாணப்பணிகளும் பகுதியளவு ஆரம்பமாகின. 9 வீடுகளுக்கு பகுதியளவு சுவர்களும் ஏற்றப்பட்டன. இந்நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் ஒப்பந்தக்காரர்களால் வீட்டுத் திட்டம் அவ்வாறே கைவிடப்பட்டது. இது தொடர்பில் பயனாளிகள் 'ட்ரஸ்ட்' நிறுவனத்திடம் பல தடவைகள் முறையிட்டும் உரிய தீர்வு கிடைக்கவில்லை.
தற்போது வீடுகள் நிர்மாணிக்கப்பட்ட பகுதி காடாகி வருகின்றது. இந்நிலையிலேயே வீட்டுத்திட்டத்தை முன்னெடுத்து முழுமைப்படுத்துமாறு கோரி பயனாளிகள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.