விரைவில் 5,500 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் - கல்வி அமைச்சர்
தெரிவு செய்யப்பட்ட பாடப்பரப்புகளுக்காக 5,500 ஆசிரியர்களை சேவையில் இணைத்துக்கொள்வதற்கான வர்த்தமானி அறிவித்தல்கள் இதுவரை வௌியிடப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இன்று (24) பாராளுமன்றில் பதிலளித்த அமைச்சர், இரசாயன விஞ்ஞானம், பௌதீக விஞ்ஞானம், உயிரியல், கணிதம், தொழில்நுட்பம் மற்றும் விசேட மொழிகளுக்கான ஆசிரியர்களை விரைவில் சேவையில் இணைத்துக்கொள்ளப்படுவார்கள் என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
மேலும் 22,000 பட்டதாரிகளை இணைத்துக்கொள்வது தொடர்பில் உயர் நீதிமன்றில் தொடரப்பட்டு கடந்த 9 மாதங்கள் விசாரணைகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளதாகவும் அடுத்தவாரம் தீர்ப்பு அறிவிக்கப்படும் என்றும் தாம் நம்புவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
அவர்கள் ஏற்கனவே பாடசாலைகளில் சேவையாற்றுவதனால் தற்போது நிலவும் 40,000 வெற்றிடங்களின் குறித்த பட்டதாரிகள் நீக்கப்படவேண்டும் என்றும் ஏற்கனவே மாகாண மட்டங்களில் 13,500 ஆசிரியர் நியமனங்களை வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளபோதிலும் இவ்விடயம் தொடர்பில் இன்னும் நீதிமன்ற செயற்பாடு முன்னெடுக்கப்படுவதனால் தாமதிக்கப்படுவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.