ஹொரன பிரதேசத்தில் அமைந்துள்ள தொழிற்சாலையொன்றில் 47 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என இங்கிரிய நிர்வாக பொது சுகாதார பரிசோதகர் எல்.பி.எல் பிரியந்த தெரிவித்துள்ளார். இவர்களில் 37 இந்தியர்களாவர்.
இங்கிரிய பொது சுகாதார வைத்திய அதிகாரிகள் காரியாலயத்திற்குட்பட்ட பிரதேசத்தில் கடந்த நடத்தப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் பெறுபேறுகள் கடந்த 11ம் திகதி வௌியானதையடுத்து குறித்த தொழிற்சாலையில் உள்ள ஊழியர்கள் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அங்குள்ள அனைவருக்கும் பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டது. நேற்று (14) பரிசோதனை முடிவுகள் வௌியானதையடுத்து 47 பேருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது குறித்த தொழிற்சாலையில் மொத்தமாக 50 பேருக்கு கொவிட் 19 தொற்று ஏற்பட்டுள்ளது. தற்போது தொற்றாளர்களுடன் நெருங்கி பழகியவர்கள் அடையாளங்காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஏனைய தொழிற்சாலை ஊழியர்கள் தொழிற்சாலைக்குள்ளேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தொழிற்சாலை ஊழியர்களுக்கு தொற்று எவ்வாறு ஏற்பட்டது என்பது தொடர்பில் தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் தொழிற்சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது என்று பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.