ரயில்வே திணைக்களத்துக்குச் சொந்தமான காணிகளை சட்ட விரோதமாக கைப்பற்றி உபயோகித்து வரும் நபர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அந்த காணிகளை மீள சுவீகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென போக்குவரத்து ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
ரயில்வே ஊழியர்கள் 394 பேர் இவ்வாறு சட்டவிரோதமான முறையில் ரயில்வே காணிகளை கைப்பற்றியுள்ளனரென்றும் எந்தவித அனுமதியுமின்றி இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ள காணிகளை மீள பெற்றுக்கொள்ள சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதெனவும் அமைச்சர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையில் பாராளுமன்ற உறுப்பினர் கிங்ஸ் நெல்சன் எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர்,
ரயில்வே திணைக்கள ஊழியர்கள் 394 பேர் திணைக்களத்துக்கு சொந்தமான காணிகளை சட்டவிரோதமான முறையில் கைப்பற்றியுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் தற்போது சேவையில் இல்லை. ஒருசிலர் மரணமடைந்துள்ளனர். ஏனையோரே தற்போது சேவையிலுள்ளனர்.
சட்டவிரோதமான முறையில் கைப்பற்றப்பட்டுள்ள காணிகளை மீண்டும் அரசுடமையாக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க சட்ட மாஅதிபர் திணைக்களத்தில் ஆலோசனை கோரப்பட்டுள்ளது.
அதேவேளை, ரயில்வே திணைக்களத்துக்குச் சொந்தமான காணிகளில் தற்காலிகமாக குடியிருப்பவர்கள் திணைக்களத்துக்கு வரி செலுத்துகின்றார்கள். ஒரு சிலர் வரி செலுத்துவதில்லை. சில பகுதிகளில் வாழ்பவர்கள் பலவந்தமான முறையில் திணைக்கத்துக்கு சொந்தமான காணிகளில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.
மூலம் - தினகரன்