ஊழியர் சேமலாப நிதியத்தில் 30% இலகுவாக பெறும் வகையில் திருத்தம்!
பயனாளிகள் தமது தேவைகளுக்கு ஏற்ப 30% நிதியைப் பெற்றுக்கொள்ளும் வகையில் ஊழியர் சேமலாப நிதிச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படும் என தொழிலாளர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் நடைபெற்ற தொழிலாளர் ஆலோசனைக் குழுவின் மாதாந்தக் கூட்டத்தில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
தற்போது, வருங்கால வைப்பு நிதி பயனாளிகள் 30% நிதியை வீடு தொடர்பான தேவைகள் மட்டும் குறிப்பிட்ட சில மருத்துவ தேவைகளுக்காக மாத்திரமே விடுவிக்கப்படுகிறது. குறித்த நிதியை பெறுவதற்கு பல்வேறு ஊழல்கள், முறைகேடுகள் மற்றும் மோசடி நடவடிக்கைகள் பதிவாகியுள்ள அதேவேளை, விதிமுறைகளில் உள்ள சிக்கலான தன்மை காரணமாக, விண்ணப்பதாரர்கள் நிதியைப் பெறுவதற்கு பல விசேட ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டியுள்ளதாகவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்
செலவினங்களைக் குறைக்கும் நோக்கில் இந்தத் திருத்தங்கள் கொண்டுவரப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார்.
இதன்படி, எதிர்காலத்தில், ஊழியர் சேமலாப நிதியத்தின் (EPF) உறுப்பினர்கள் தமது எந்தவொரு தேவைக்காகவும் தமது நிதியில் 30% நிதியை இலகுவாகப் பெற்றுக்கொள்ள முடியும் என அமைச்சர் தெரிவித்தார்.
தொடர்ந்து 10 ஆண்டுகளாக ஊழியர் சேமலாப நிதியத்தில் வரவு வைக்கப்பட்டு, 300,000 ரூபா வரை நிதியுள்ள பயனாளிகள் 30 வீத நிதியை பெற முடியும்.
தேசிய தொழிலாளர் ஆலோசனைக் குழுவில் அங்கத்துவம் வகிக்கும் தொழிற்சங்கங்களின் தலைவர்கள் திருத்தத்தில் உள்ளடக்கப்பட வேண்டிய வேறு ஏதேனும் முன்மொழிவுகளை சமர்ப்பிக்குமாறு தொழிலாளர் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
திருத்தத்தின் பின்னர் ஊழியர் சேமலாப நிதியத்தின் 30 வீத நிதியை பயனாளிகள் குழந்தைகளின் கல்வி, பிள்ளைகளின் திருமணம், வீடு பழுதுபார்ப்பு மற்றும் வாகனம் வாங்குதல் போன்றவற்றுக்கு பெற்றுக்கொள்ள முடியும் என்று தொழிலாளர் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
தொடர்பான செய்திகளுக்கு
EPF, ETF நிதியங்கள் மீது வரி அறவிடப்படாது!
EPF , ETF நிதிங்கள் மீதான வரி - திருத்தங்கள் செய்யவேண்டியது பாராளுமன்றமே!
ETF, EPF நிதியத்துக்கு வரி செலுத்துவது சாத்தியமில்லை - தொழில் அமைச்சர்
EPF உட்பட நிதியங்களுக்கு 25 வீத வரி - கடுமையாக எதிர்க்கும் ஊழியர் மத்திய நிலையம்