கொவிட் 19 தடுப்பூசி தொடர்பான திட்டமிடலில் முதற்கட்டமாக 3,441,000 பேருக்கு (34 இலட்சத்து 41 ஆயிரம் பேருக்கு) தடுப்பூசி வழங்க திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அரச தடுப்பூசி வழங்குவதற்கான குழுவின் தலைவர், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் லலித் வீரதுங்க குறிப்பிட்டமைக்கமைய, 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 3,159,800 இத்தடுப்பூசி வழங்கல் திட்டத்தின் முதற்கட்டத்திற்கு உள்வாங்கப்பட்டுள்ளனர். மேலும் சுகாதார சேவையாளர்கள் 155,000 பேர் மற்றும் முப்படையினர், பொலிஸர் உட்பட கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள 127,500 பேர், நகர சுத்திகரிப்பாளர்கள் ஆகியோர் முதற்கட்ட தடுப்பூசி வழங்கலில் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
ஏனையோர்களுக்கு அவரவர் வயது, ஆரோக்கியம் என்பவற்றுக்கமைய தடுப்பூசி வழங்கப்படும். எவ்வாறு இருப்பினும் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தடுப்பூசி வழங்குவது தொடர்பான தீர்மானம் விசேட வைத்திய நிபுணர்களின் ஆலோசனைக்கமைய முன்னெடுக்கப்படும். இந்நாட்டில் மொத்த சனத்தொகையில் 60 வீதமானவர்களுக்கு பல சுற்றுக்களில் இத்தடுப்பூசியை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகிறது.