தற்போது அமுலில் இருக்கும் பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 7 ஆம் திகதி( ஜீன் மதாம் 07ஆம் திகதி) வரை நீடிக்கப்படவுள்ளது.
பயணக்கட்டுப்பாடு அமுலில் இருக்கும் நிலையில், நாளையும் எதிர்வரும் 31 மற்றும் 04 ஆம் திகதிகளில் அருகில் இருக்கும் வர்த்தக நிலையங்களில் மாத்திரம் அத்தியாவசிய பொருள் கொள்வனவில் ஈடுபடுவதற்கு பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்டும் என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ குறிப்பிட்டார்.
அதற்கமைய நாளை காலை 04 மணியிலிருந்து இரவு 11 மணி வரை பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்டு மீண்டும் நாளை இரவு 11 மணி தொடக்கம் எதிர்வரும் 31 ஆம் திகதி அதிகாலை 04 மணி வரை பயணக்கட்டுப்பாடு அமுல் படுத்தப்படும் என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்தார்.
31 ஆம் திகதி இரவு 11 மணி தொடக்கம் மீண்டும் அமுல்படுத்தப்படும் பணயக்கட்டுப்பாடு ஜூன் மாதம் 04 ஆம் திகதி காலை 04 மணி வரை தொடர்ந்தும் பயணக்கட்டுப்பாடு அமுலில் காணப்படும் என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ கூறினார்.
நான்காம் திகதி இரவு 11 மணி தொடக்கம் ஜூன் மாதம் 07 ஆம் திகதி காலை 04 மணி வரை தொடர்ந்தும் பயணக்கட்டுப்பாடு நடைமுறைப்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டார்.
பயணக்கட்டுப்பாடு தொடர்பில் தௌிவுப்படுத்துவதற்காக அரசாங்கத தகவல் திணைக்களத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இந்த விடயங்களை தௌிவுப்படுத்தினார்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் தலைமையில், துறைசார் அமைச்சர்கள் மற்றும் சுகாதார அதிகாரிகளுடன் இன்று நடாத்தப்பட்ட கலந்துரையாடலின் போது, பயணக்கட்டுப்பாட்டை நீடிப்பதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா குறிப்பிட்டார்.
மக்கள் தங்களின் வீடுகளுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்கு மாத்திரமே ஒரு சில நாட்களுக்கு பயணக்கட்டுப்பாட்டை தளர்த்த தீர்மானிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்படும் நாட்களில் வீடுகளில் இருந்து ஒருவர் மாத்திரம் வௌியில் சென்று அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்யுமாறும் இராணுவத் தளபதி கோரிக்கை விடுத்துள்ளார்.
பிரதேச செயலாளர்களினால் பரிந்துரைக்கப்பட்டுள்ள கடைகள் மற்றும் மருந்தகங்களில் தங்களுக்கு தேவையான பொருட்களை கொள்வனவு செய்ய முடியும் என இராணுவத் தளபதி குறிப்பிட்டார்.
வாகனங்களில் பயணிக்காது, நடந்துச் செல்லக்கூடிய தூரத்திலுள்ள வர்த்தக நிலையங்களுக்கு மாத்திரமே செல்ல வேண்டும் என அவர் தெரிவித்தார்.
பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் வங்கிச் சேவை முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும், குறைந்தபட்ட ஆளணியை கொண்டு வங்கிச் சேவையை முன்னெடுக்க வேண்டும் என இராணுவத் தளபதி கூறியுள்ளார்.
பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்படும் காலப்பகுதியில் ஆடை விற்பனை நிலையங்கள் உள்ளிட்ட ஆடம்பர தேவைகளுக்கான வர்த்தக நிலையங்கள் திறக்கப்படாது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டார்.
மரக்கறி, மீன்கடை, இறைச்சிக்கடை மற்றும் அதியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்களை திறப்பதற்கு மாத்திரமே பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்படும் காலப்பகுதியில் அனுமதி வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.
அத்தியாவசிய சேவைக்கான அடையாள அட்டைகளை பயன்படுத்தி சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுவோர் தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாகவும், அவ்வாறானவர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.
மூலம் - நியூஸ்பெஸ்ட்