ஆசிரியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பில் கல்வி அமைச்சரின் கருத்து

ஆசிரியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பில் கல்வி அமைச்சரின் கருத்து

ஆசிரியர் நியமனங்களை வழங்குவது இலகுவான காரியமல்ல. பொருளாதார நெருக்கடி நிலையிலும் இந்த ஆசிரியர் நியமனங்களை வழங்குவதற்கான சவாலை நாங்கள் ஏற்றுக்கொண்டதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

கல்வி நிர்வாக சேவை உத்தியோகத்தர்களுக்கான நியமனங்கள் மற்றும் டிப்ளோமாதாரிகளுக்கான ஆசிரியர் நியமனங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று (03) அலரி மாளிகையில் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது. இதன்போதே மேற்கண்டவாறு தெரிவித்த கல்வி அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

இன்று தேசிய பாடசாலைகளுக்கு சுமார் 2000 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். நாட்டை பொருளாதார நெருக்கடிகளில் இருந்து விடுவித்து, பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இவ்வாறான நியமனங்களை வழங்குவதற்காக மேற்கொள்ளப்பட்ட பொருளாதாரப் பணி தற்போது வெற்றியடைந்துள்ளது.

நாடு வங்குரோத்து நிலையில் இருந்த வேளையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நிதி அமைச்சராக நிதி ஒதுக்கீடுகளைச் செய்து உங்களுக்கு நியமனங்களை வழங்க முடிந்தது. ஆனால் இந்த நியமனத்தை பெற்றுக்கொண்டு தொழிற்சங்க நடவடிக்கைகளில் இணைந்து பிள்ளைகளின் எதிர்காலத்தை இருளாக்காதீர்கள். நீங்கள் பட்டதாரியாக கல்விப் பயணம் மேற்கொண்டது. உங்களின் ஆசிரியர்கள் உங்களுக்கு வழங்கிய கல்வியினால் தான். ஆனால், நீங்கள் பிள்ளைகளுக்கு கல்வியை கற்றுக் கொடுக்காமல் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டால், நமது பிள்ளைகளின் எதிர்காலம் இருண்டுவிடும்.

கல்வி அமைச்சராக ஈரியகொல்ல, முன்வைத்த சட்டமூலத்திற்கு எதிராக வரவுப் பதிவில் கையொப்பமிடாமல் பிள்ளைகளுக்கு கற்பித்து அப்போதைய ஆசிரியர்கள் தொழிற்சங்க நடவடிக்கை எடுத்தனர். அவர்களை முன்னுதாரணமாக எடுத்துக் கொள்வீர்கள் என்று நான் நம்புகிறேன். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அன்று கல்வி அமைச்சராக தேசிய கல்வி நிறுவகத்தை ஸ்தாபித்து கல்வித்துறையில் விரிவான நிறுவனப் பலத்தை உருவாக்க நடவடிக்கை எடுத்தார்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு சட்டத்தை கொண்டு வந்ததும் கல்வி அமைச்சராக ரணில் விக்கிரமசிங்க அவர்களே, கல்வியியல் கல்லூரிகளை உருவாக்கியதும் தற்போதைய ஜனாதிபதியே. அதன் ஊடாக ஆண்டுக்கு சுமார் ஐயாயிரம் ஆசிரியர்கள் உருவாகுகிறார்கள். கல்வித்துறைக்கு அளப்பரிய சேவை செய்த ஒருவர் இன்று ஜனாதிபதியாக இருப்பது கல்வித்துறைக்கு கிடைத்த அதிர்ஷ்டமாகும்.

பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற ஒருவர், யாரிடமும் கையேந்தாமல் வேலை வாய்ப்புகளைப் பெற திறமை இருக்க வேண்டும். எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் கல்வி மறுசீரமைப்பின் மூலம் தொழில் வாய்ப்புக்கு ஏற்ற பட்டதாரிகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும். மனித வளங்களை முறையாக நிர்வகிப்பதன் மூலம் ஒரு நாட்டை பொருளாதார ரீதியாக பலப்படுத்த முடியும்” என்று தெரிவித்தார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image