MPக்களுக்கு கிடைக்கும் சலுகைகள் குறித்து பாராளுமன்ற செயலாளர் நாயகம் விளக்கம்
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படுவது சம்பளமல்ல, கொடுப்பனவே வழங்கப்படுவதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார்.
தற்போது பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு சுமார் 54,000 ரூபா கொடுப்பனவாக வழங்கப்படுகிறது.
இது தவிர, வருகை கொடுப்பனவாக பாராளுமன்றக் கூட்டங்கள் நடைபெறும் நாட்களில் 2,500 ரூபாவும் மற்றும் கூட்டத்தொடர் இல்லாத நாட்களில் குழுக்களில் கலந்துகொள்வதற்கு 2,500 ரூபாவும் உதவித் தொகையாக வழங்கப்படும்.
தூரத்தை அடிப்படையாகக் கொண்டு எரிபொருள் கொடுப்பனவு வழங்கப்படுவதாகவும், அது சூத்திரத்தின்படி கணக்கிடப்படுவதாகவும் அவர், தெரிவித்தார்.
அதுமட்டுமல்லாமல், பாராளுமன்றத்திலிருந்து 40 கிலோ மீற்றருக்குக்குள் வீடு இல்லாதவர்கள், மாதிவெலயில் அமைந்துள்ள குடியிருப்புக்களை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அவர் கூறினார்.
மாதிவெலயில் இவ்வாறான 108 வீடுகள் இருப்பதாகவும், கோரிக்கைகள் முன்வைக்கப்படும் வரிசையில்,ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்பிக்களுக்கு வீடுகள் வழங்கப்படும் என்றும் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.
வீட்டு வாடகையாக 2,000 ரூபா செலுத்தப்படுமென்றும், மின்சாரம் மற்றும் தண்ணீர் கட்டணத்தை சம்பந்தப்பட்ட உறுப்பினர் செலுத்த வேண்டுமென்றும் பாராளுமன்ற பொதுச் செயலாளர் மேலும் தெரிவித்தார்.
ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் மருத்துவ வசதிகளை பெற்று கொடுப்பதன் மூலம் கொடுப்பனவுத் தொகையை குறைக்க பாராளுமன்றம் மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சு இணைந்து வசதியளித்துள்ளதாக தெரிவித்த செயலாளர் நாயகம், பாராளுமன்ற உறுப்பினர்களின் தனிப்பட்ட ஊழியர்களுக்குத் தேவையான கொடுப்பனவுகளையும் அமைச்சு ஏற்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
மூலம் - தினகரன்