பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் இன்று கலந்துரையாடல்!

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் இன்று கலந்துரையாடல்!
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக சம்பள நிர்ணய சபை இன்று கூடுகிறது.


இன்று முற்பகல் தேயிலைத் தொழிலாளர்களுக்கான சம்பளம் தொடர்பிலும் பிற்பகல் இறப்பர் தொழிலாளர்களுக்கான சம்பளம் தொடர்பிலும் கலந்துரையாடப்படவுள்ளது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த அடிப்படை சம்பளமாக 1,700 ரூபா வழங்கப்பட  வேண்டும் என வலியுறுத்தி இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கடந்த வெள்ளிக்கிழமை (20) கொழும்பில்  போராட்டம் நடத்தியது.
 
இது தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வௌியிட்டிருந்த அறிக்கையில்,
 
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்குமாறு வலியுறுத்தி இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸால் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
 
இ.தொ.காவின் தேசிய அமைப்பாளர் சக்திவேல் தலைமையில் இந்தப் போராட்டம் ஏற்பாடும் செய்யப்பட்டதுடன், பெருமளவான தொழிலாளர்களும், இ.தொ.காவின் ஆதரவாளர்களும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். 
 
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக 1700 ரூபாவை வழங்குமாறு அரசாங்கம் கம்பனிகளிடம் கோரிக்கை விடுத்துடன், அமைச்சரவையிலும் இதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
 
என்றாலும், கம்பனிகள் 1700 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்க முடியாதென தொடர்ச்சியாக கூறிவருவதுடன், அரசாங்கத்தின் தீர்மானத்தையும் ஏற்க மறுத்து வருகின்றன.  
 
இதுதொடர்பில் தொழில் அமைச்சு, முதலாளிமார் சம்மேளனம் மற்றும் இ.தொ.காவிற்கும் இடையில் நடைபெற்ற பல சுற்றுப் பேச்சுகளும் தோல்வியிலேயே முடிந்தன. 
 
இதன் காரணமாகவே கம்பனிகளுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இன்று கொழும்பில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை இ.தொ.கா முன்னெடுத்ததாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
 
இறுதியாக கடந்த 10ஆம் திகதி சம்பள நிர்ணய சபை கூடியது. அன்றைய தினம் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பளம் தொடர்பில் வாக்கெடுப்பை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது. எனினும் முதலாளிமார் சம்மேளனம் குறித்த வாக்கெடுப்பை அன்றைய தினம் புறக்கணித்திருந்தது.

இந்த நிலையில் இன்றைய தினம் பேச்சுவார்த்தை இடம்பெறுகிறது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image