சம்பள உயர்வு தொடர்பில் இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தின் அறிவிப்பு

சம்பள உயர்வு தொடர்பில் இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தின் அறிவிப்பு

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு விடயத்தில் தொழிற்சங்கங்களின் சார்பில் முன்வைக்கப்பட்டுள்ள 1,700 ரூபா சம்பள அதிகரிப்பு கோரிக்கை சாத்தியமற்றது என இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

இன்று சம்பள நிர்ணய சபையின் தலைமையில் தொழில் அமைச்சில் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ள நிலையிலேயே முதலாளிமார் சம்மேளனம் இவ்வாறு அறிவித்துள்ளது.

முதலாளிமார் சம்மேளனத்தித்தின் நிலைப்பாட்டை அதன் ஊடகப் பேச்சாளர் ரொஷான் ராஜதுரை தெரிவித்தார்.

முதலாளிமார் சம்மேளனத்தின் நிலைப்பாடு குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு விடயத்தில் தொழிற்சங்கங்கள் முன்வைத்துள்ள 1,700 ரூபா எனும் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளமுடியது.

தேயிலை உற்பத்தியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி மற்றும் உலக சந்தையில் தேயிலைக்கான கேள்வி குறைவடைந்துள்ளதால் தேயிலைத்துறைக்கு ஏற்பட்டுள்ள சவால்கள் என்பனவற்றின் அடிப்படையில் இந்தச் சம்பள அதிகரிப்பை வழங்குவது சாத்தியமற்றது.

இந்த விவகாரம் தொடர்பில் ஏற்கனவே தொழிற்சங்கங்களுடன் இடம்பெற்ற பேச்சுவார்ததைகளில் எமது நிலைப்பாட்டை திட்டவட்டமாக அறிவித்திருந்தோம்.

ஆனாலும் தொழிற்சங்கங்கள் தொடர்ச்சியாக இந்த சம்பள அதிகரிப்பை கோருவது நியாயமற்றது.

கடந்த காலங்களில் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளதை ஏற்றுக்கொள்கின்றுாம்.

எனவே தான் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் 20 வீத சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கு முன்வந்துள்ளோம்.

அப்படியில்லாவிட்டால் கிலோவொன்றுக்கு 65 ரூபா வீதம் வழங்குவதற்கு நாம் தயாராக இருக்கின்றோம்.

நாம் தொழிலாளர்களை ஒருபோதும் ஏமாற்றுவதற்கு முயற்சிக்கவில்லை. தேயிலைத்துறையின் தற்கால நிலைமைகளை தொழிற்சங்கங்களும் தொழிலாளர்களும் ஆராய வேண்டும்.

தொழிற்சங்கங்கள் 75 வீத சம்பள அதிகரிப்பை கோருகின்றன. அரச துறையின் கீழ் இயங்குகின்ற தொழிற்றுறைகளில் கூட 75 வீத சம்பள அதிகரிப்பு வழங்கப்படுவதில்லை.

இந்த நிலையில் அரசாங்கத்திடம் குத்தகையின் அடிப்படையில் நிர்வகிக்கப்படும் தேயிலை தொழிற்றுயைில் இவ்வளவு அதிக சம்பள உயர்வை வழங்குவதென்பது சாத்தியமற்றது என்று தெரிவித்தார்

மூலம் - வீரகேசரி

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image