பெருந்தோட்டத் துறையில் சிறுதோட்ட முறைமையை ஏற்படுத்தல் - தனிநபர் பிரேரணை முன்வைப்பு

பெருந்தோட்டத் துறையில் சிறுதோட்ட முறைமையை ஏற்படுத்தல் - தனிநபர் பிரேரணை முன்வைப்பு

வீழ்ச்சியடைந்துள்ள பெருந்தோட்டத்துறையை லாபமீட்டும் துறையாக மாற்றியப்பதாக இருந்தால் பெருந்தோட்டத்துறைகளை சிறுதோட்டத் துறைகளாக மாற்றியமைக்க வேண்டும். அதன் மூலமே இந்திய வம்சாவளி மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என எம்.வேலுகுமார் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளி்க்கிழமை  (12) பெருந்தோட்ட தேயிலை கைத்தொழிலுக்கு பதிலாக தேயிலை சிறுதோட்ட முறைமையினை ஏற்படுத்தும் தனிநபர் பிரேரணையை முன்வைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

பெருந்தோட்ட மக்கள் இற்றைக்கு 200 வருடங்களுக்கு முன்னர் தென்னிந்தியாவில் இருந்து எவ்வாறு இலங்கைக்கு வந்தார்களோ அவ்வாறே இன்றும் வாழ்ந்து வருகிறார்கள். எங்களை இந்தியாவில் இருந்து கொண்டுவரும்போது கூலித்தொழிலாளியாகவே கொண்டுவந்தார்கள். 

இப்போதும் கூலித் தொழிலாளர்களாகவே இருக்கிறோம்.அதேபோன்று கொண்டுவரப்பட்ட லயன் அறைகளிலேயே தங்கவைக்கப்பட்டார்கள். இப்போதும் அந்த லயம் அறைகளிலேயே இருந்து வருகின்றனர். 

அதனால் 200 வருடங்களாகியும் இந்திய வம்சாவளி மக்கள் கூலித் தொழிலாளியாகவும் அவர்களின் வாழ்விடம் லயன் அறையாகவுமே இருந்துவருகிறது. அதில் எந்த மாற்றமும் இடம்பெறவில்லை.

எனவே இந்த மக்களின் வாழ்க்கையில் ஒரு ஆக்கப்பூர்வமான மாற்றம் ஒன்றை ஏற்படுத்தும் நோக்கில் பெருந்தோட்ட தேயிலை கைத்தொழிலுக்கு பதிலாக தேயிலை சிறுதோட்ட முறைமையினை ஏற்படுத்தும் பிரேரணையை இந்த சபையில் முன்வைத்திருக்கிறேன். 

அத்துடன் 1948 காலப்பகுதியில் நாட்டின் அந்நிய செலாவணியில் 90 வீதமானவை பெருந்தோட்ட கைத்தொழில் மூலமே பெறப்பட்டு வந்திருக்கிறது. அதேபோன்று அரசாங்கம் சம்பாதித்த மொத்த வருமானத்தில் நூற்றுக்கு 24வீதம் பெருந்தோட்ட கைத்தொழில் ஊடாகவாகும்.

 ஆனால் தனியார் துறையில் இருந்து அரசாங்கத்துக்கு 1972ஆம் ஆண்டு சட்டத்தின் ஊடாக இந்த பெருந்தோட்டத்துறை பொறுப்பேற்கப்பட்டு 3 நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்டது.என்றாலும்  ஜே.ஈ.டி,பி மற்றும் எஸ்.எல்.எஸ்.பி.சி நிறுவனங்கள் ஊடாக பெருந்தோட்டத்துறை 1,5 பில்லியன் ரூபா நட்டமடைந்துள்ளதாக 1992இல் இனம் காணப்பட்டிருந்தது. 

இற்றைக்கு 30 வருடமாக இந்த நிறுவனங்கள் நட்டமடைந்து வருகின்றன. ஆனால் எந்தவொரு அரசாங்கமும் இதுதொடர்பில் நடவடிக்கை எடுக்கவில்லை. இவ்வாறு செல்லும்போது நாடு வங்குராேத்து அடைவதில்லையா என கேட்கிறேன்.

அத்துடன் தேயிலை உற்பத்தியில் நூற்றுக்கு 90வீத உற்பத்தி பெருநதோட்ட துறையில் இருந்தே பெறப்பட்டது.இதல்  3இலட்சத்து 89ஆயிரத்து 549 பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்கள் இருந்தார்கள். ஆனால் நூற்றுக்கு 90 வீத உற்பத்தியை பெற்றுக்கொடுத்துவந்த பெருந்தோட்டத் துறை தற்போது நூற்றுக்கு 22, 23வீத உற்பத்தியை பெற்றுக்கொடுத்து வருகிறது. 

ஆனால் தற்போதும் இந்த கம்பனிகளுக்கு 40வீதமான காணிகள் இருந்து வருகின்றன.தற்போது தேசிய வருமானத்துக்கு பெருந்தோட்ட துறையில் இருந்து நூற்றுக்கு 1 வீதமே கிடைக்கிறது. அதில் தேயிலை உற்பத்தியில் இருந்து நூற்றுக்கு பூச்சியம் தசம் 5 வீதமே பெறப்படுகிறது.

அதனால் பெருந்தோட்டத்துறை இன்று தோல்வியடைந்த முறையாக மாறி இருக்கிறது. அதேபோன்று ஜே.ஈ.டி,பி மற்றும் எஸ்.எல்.எஸ்.பி.சி நிறுவனங்கள் 20 வருடங்களாக நட்டமடைந்த நிறுவனங்களாக மாறியுள்ளன. 

அதனால் பெருந்தோட்டத்துறை மற்றும் இந்த நிறுவனங்களை மறுசீரமைப்பு செய்ய வேண்டும். அவ்வாறு செய்வதாக இருந்தால். பெருந்தோட்டத்துறையை சிறுதோட்டத்தறையாக மாற்ற வேண்டும்.தற்காலத்தில் சிறுதோட்டத்துறையே வெற்றியடைந்த துறையாக இனம் காணப்பட்டுள்ளது என்றார்.

மூலம் - வீரகேசரி

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image