இலஞ்சம் அல்லது ஊழல் புலனாய்வு ஆணைக்குழுவிற்கு உறுப்பினர்களை நியமிப்பதற்கான விண்ணப்பங்கள் கோரல்

இலஞ்சம் அல்லது ஊழல் புலனாய்வு ஆணைக்குழுவிற்கு உறுப்பினர்களை நியமிப்பதற்கான விண்ணப்பங்கள் கோரல்
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவிற்கு உறுப்பினர்களை நியமிப்பதற்கான விண்ணப்பங்கள் கோரல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
 
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 41 ஆ என்னும் உறுப்புரையின் ஏற்பாடுகளின் கீழும் 2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க, ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழும், இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் உறுப்பினர்களாக மூவரை நியமிப்பதற்காகப் பொருத்தமான தனிநபர்களை விதந்துரைப்பதைப் பரிசீலிப்பதற்காக அரசியலமைப்புப் பேரவை விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
 
இதற்கமைய கீழ் குறிப்பிடப்பட்டுள்ள துறையொன்றில் அல்லது அதற்கு மேற்பட்ட துறைகளில் நிபுணத்துவம் கொண்டவர்களாகவும், மேன்மையடைந்தவர்களாகவும் ஆகக்குறைந்தது இருபதாண்டுகள் அனுபவத்தைக் கொண்டவர்களாகவும் இருந்தால் இதற்கு விண்ணப்பிக்க முடியும்.
 
i. சட்டம்;
ii. குற்றப்புலனாய்வு மற்றும் சட்ட வலுவுறுத்தல்;
iii. சட்டவிரோத நிதி நடவடிக்கைகளைக் கண்டுபிடிப்பதற்கான நிதிப் பதிவுகளின் கணக்காய்வு;
iv. சட்டவிரோத நிதி நடவடிக்கைகளைக் கண்டுபிடிப்பதற்கான நிதிப் பதிவுகளின் கணக்கியல்;
v. பொறியியல்;
vi. சர்வதேசத் தொடர்புகளும் இராஜதந்திரச் சேவைகளும்;
vii. பகிரங்க அலுவல்களின் முகாமை; அல்லது
viii. பொது நிருவாகம்.
 
அத்துடன் ஒவ்வொரு விண்ணப்பதாரியும்-
 
i. இலங்கையின் பிரசையொருவராக இருத்தல் வேண்டும்;
ii. ஆணைக்குழுவுக்கு நியமிக்கப்பட்ட திகதியன்றுள்ளவாறாக அறுபத்திரெண்டு (62) வயதுக்கு மேற்பட்டவராக இருத்தலாகாது;
iii. உடல்ரீதியிலும் உளரீதியிலும் தகுதியுடையவராக இருத்தல் வேண்டும்;
iv. தகுதிவாய்ந்தவராகவும், நேர்மையானவராகவும், உயர் ஒழுக்க நேர்மையுடையவராகவும், நன்மதிப்புள்ளவராகவும் இருத்தல் வேண்டும்;
v. ஆணைக்குழுவின் உறுப்பினரொருவராக நியமிக்கப்படுமுன்னர் ஊதியம்பெறும் வேறெல்லாப் பதவிகளையும் கைதுறந்தவராக இருத்தல் வேண்டும். ஆயின். எவ்வாறாயினும், ஏதேனும் ஊதியம்பெறும் பதவியை வகிக்கின்ற ஆளொருவர், அத்தகைய உறுப்பினராகப் பதவியேற்குமுன்னர் அத்தகைய ஆள் ஊதியம் பெறும் எல்லாப் பதவிகளையும் கைதுறந்தால், ஆணைக்குழுவின் உறுப்பினரொருவராக நியமிக்கப்படுவதற்காகக் கவனத்துட்கொள்ளப்படலாம்.
vi. ஆணைக்குழுவின் உறுப்பினரொருவராக இருக்கையில் ஏதேனும் தொழிலைக்கொண்டு நடாத்துதலாகாது அல்லது ஏதேனும் உயர்தொழிலைப் பின்தொடருதலாகாது, அத்துடன்;
vii. அத்தகைய உறுப்பினராகப் பதவியேற்குமுன்னர் நிலவுகின்ற எழுத்திலான சட்டங்களுக்கிணங்க அரசியலமைப்புப் பேரவைக்கு அவரது சொத்துக்களையும் பொறுப்புக்களையும் வெளிப்படுத்துதல் வேண்டும்; மற்றும்
viii. ஆணைக்குழுவின் உறுப்பினராகப் பதவியேற்குமுன்னர் நியமிக்கப்படும் திகதியன்றுள்ளவாறாக அவரின் அக்கறைகளின் பகிரங்க வெளிக்கூறலை அவர் அரசியலமைப்புப் பேரவைக்குச் சமர்ப்பித்தல் வேண்டும்.
 
அத்துடன் அத்தகைய ஆள் –
 
i. குற்றப்பணமொன்றினால் மட்டும் தண்டிக்கப்படற்பாலதானவொரு தவறல்லாத குற்றவியல் தவறொன்றுக்குக் குற்றத்தீர்ப்பளிக்கப்பட்டிருப்பின்;
ii. தகுதிவாய்ந்த நியாயாதிக்கமுள்ளவொரு நீதிமன்றத்தினால் ஒரு கடனிறுக்க வகையற்றவராகத் தீர்ப்பளிக்கப்படின்;
iii. சித்தசுவாதீனமற்றவராகவிருப்பின் அல்லது சட்டத்தின் கீழ் தனது கடமைகளை நிறைவேற்ற இயலாதவராகவிருப்பின்;
iv. அத்தகைய ஆளின் கடமைகள் தொடர்பாகப் பாரதூரமான துர்நடத்தைக்குக் குற்றவாளியாகவிருப்பின்;
v. இச்சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் தனது கடப்பாடுகளுக்கு இணங்கியொழுகத் தவறின்;
vi. ஏதேனும் அரசியற் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியொருவராக இருப்பின் அல்லது இருந்திருப்பின்; அல்லது
vii. தேர்தல்களுக்கு ஏற்புடையப்பாலனவான முறையான சட்டங்களினது ஏற்பாடுகளின் கீழ் நடாத்தப்பட்ட சனாதிபதித் தேர்தல்களின், பாராளுமன்றத் தேர்தல்களின், மாகாண சபைத் தேர்தல்களின் அல்லது எவையேனும் உள்ளூராட்சித் தேர்தல்களின் நோக்கங்களுக்காக அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் அரசியற் கட்சியில் ஏதேனும் பதவியை அல்லது உறுப்பாண்மையை வகிப்பின் அல்லது வகித்திருப்பின்
ஆணைக்குழுவின் உறுப்பினராகத் தெரிவுசெய்யப்படுவதற்குத் தகைமையற்றவராக கருதப்படுவர்.
 
பாராளுமன்ற இணையத்தளத்தில் (https://www.parliament.lk/.../sec.../advertisements/view/292) வழங்கப்பட்டுள்ள மாதிரிக்கு அமைவாக விண்ணப்பங்கள் தயாரிக்கப்படல் வேண்டும் என்பதுடன் உரிய முறையில் பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்கள் பின்வரும் முகவரிக்குப் பதிவுத் தபாலில் அல்லது இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். எனும் மின்னஞ்சல் முகவரிக்கு 2023 நவம்பர் 06 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் அனுப்பி வைக்கப்படல் வேண்டும்,
 
அரசியலமைப்புப் பேரவைச் செயலாளர் நாயகம்,
இலங்கைப் பாராளுமன்றம்,
ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே.
 
கடித உறையின் இடது மேல் மூலையில் அல்லது மின்னஞ்சலின் விடயமாக ‘அரசியலமைப்புப் பேரவை – CIABOC இற்கான நியமனங்கள்’ எனச் சுட்டிக்காட்டவும்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image