அனைத்து தொழிலாளர்களையும் உள்ளடக்கிய விரிவான தேசிய சமூகப் பாதுகாப்பு முறைமை
அனைத்து தொழிலாளர்களையும் உள்ளடக்கிய விரிவான தேசிய சமூகப் பாதுகாப்பு முறைமைக்கு தலைமைத்துவம் வகிப்பதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
அனைத்து துறைகளிலும் தொழில் புரியும் தொழிலாளர்களையும் உள்ளடக்கும் வகையில் விரிவான தேசிய சமூக பாதுகாப்பு அமைப்பு முறையை தயாரிப்பதற்காக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு செயல்பட்டு வருகிறது.
தேசிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்ட விரிவான சமூகப் பாதுகாப்பு நடைமுறை முன்னெடுக்கப்படாமை தொடர்பில் கவனம் செலுத்தி, இந்த தேசிய சமூகப் பாதுகாப்பு முறையைத் தயாரிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
தற்போது, வரையறுக்கப்பட்ட சில துறைகளை மாத்திரம் உள்ளடக்கிய சிறிய அளவிலான சில சமூக பாதுகாப்பு முறை நடைமுறைப்படுத்தப்பட்ட போதிலும் அவற்றின் பலவீனங்களை போக்கும் ஒரு தேசிய சமூக பாதுகாப்பு முறையை தயாரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இது தொடர்பில் கவனத்தை செலுத்துவதற்காக அமைச்சின் செயலாளர் ஆர்.பீ.ஏ..விமலவீர உள்ளிட்ட பிரதிநிதிகளைக்கொண்ட குழுவினர் அண்மையில் இந்தோனேசியாவிற்கு விஜயம் செய்ததுடன் தற்போது அந்நாட்டின் சமூக பாதுகாப்பு முறைமை தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளனர்.
ஜப்பான் அரசாங்கம் மற்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் ஆதரவுடன் இந்தோனேஷியாவின் சமூக சேமநல அமைப்பு முறையை ஆய்வு செய்த தூதுக்குழு அந்த அமைப்பு முறையை இலங்கையில் முன்னெடுப்பது குறித்தும் கவனம் செலுத்தியது.
வேலையற்றோருக்கான புதிய காப்புறுதி முறையை அறிமுகப்படுத்தி முறையான மற்றும் முறைசாரா துறைகளில் உள்ள தொழிலாளர்களுக்கு மிகவும் நியாயமான மற்றும் பாதுகாப்பான பணிச்சூழலை உருவாக்க தேவையான சூழலை இது உருவாக்கும்.
இந்தோனேஷியா பணியாளர்கள் அனுபவிக்கும் இந்த முறையை இலங்கைக்கு ஒத்துப் போகும் வகையில் முன்னெடுப்பது தொடர்பில் அமைச்சு, சர்வதேச தொழிலாளர் அமைப்பு மற்றும் ஏனைய தொடர்புடைய தரப்பினர் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளனர்.அத்தோடு இந்த அனுபவங்கள் குறித்த விடயங்கள் அமைச்சின் செயலாளர்கள் உட்பட உயர்மட்ட அரசாங்க அதிகாரிகளுடன் பகிர்ந்து கொள்ளப்படவுள்ளன.
நிதி மற்றும் உடனடித் நடவடிக்கைத் திட்டங்களுடன் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் அடிப்படைக் கூறுகள் அடங்கிய அமைச்சரவைக் குறிப்பும் தயாரிக்கப்படவுள்ளதுடன், ஜனாதிபதியின் சமூகப் பாதுகாப்புக் குழுவின் கவனத்திற்கான பொதுக்கோட்பாடுகள் மற்றும் முன்மொழிவுகளும் சமர்ப்பிக்கப்பட உள்ளன. அதே நேரத்தில், உருமாறும் சமூக நல மாற்றங்கள் குறித்து பொதுமக்களுக்கு தெளிவுபடுத்தும்வகையில் பாரிய விழிப்புணர்வு நடவடிக்கையும் முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, சர்வதேச தொழில் அமைப்பின் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான பணிப்பாளர் சிம்ரின் சிங் ஆகியோர் இந்த வேலைத்திட்டத்திற்கு நடைமுறையில் ஆதரவளிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.