சர்ச்சைக்குரிய E8 விசா தொழில்வாய்ப்பை சட்டரீதியாக்க அவதானம்

சர்ச்சைக்குரிய E8 விசா தொழில்வாய்ப்பை சட்டரீதியாக்க அவதானம்

தென்கொரிய E8 விசா வகை வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு மற்றும் அனுப்பும் முறையை கவனமாக ஆராய்ந்து சட்டரீதியானதாக மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு வருவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கோசல விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கடந்த காலத்தில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தம் சட்டப்பூர்வமானது அல்ல எனவும், இது தொடர்பில் வெளியிடப்பட்ட சுற்று நிருபங்கள் மீண்டும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

E8 விசாவுடனான வேலைகள் பருவகால வேலைகளின் வகையைச் சேர்ந்தவையாகும். மேலும் இது கொரியாவில் விவசாயம் மற்றும் மீன்பிடித் துறையில் சுமார் 5 மாதங்களுக்கு வேலை செய்ய வாய்ப்பளிக்கிறது. இந்த வேலைகள் தொடர்பாக சமீபத்தில் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம் இராஜதந்திர ரீதியானதல்ல என்பதால் கொரிய தூதரகத்தால் அது நிராகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் முன்னாள் தலைவர் ஒருவரின் கையொப்பத்துடன் இந்த வருடம் செப்டெம்பர் மாதம் 3ஆம் திகதி வெளியிடப்பட்ட சுற்றறிக்கை மீண்டும் செப்டெம்பர் 23ஆம் திகதி இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

எனவே, தற்போது இந்த வேலைவாய்ப்பு சட்டரீதியாக  செல்லுபடியாகாது. மேலும் விடயங்களை சரியாக அறியாமல் பல்வேறு தரப்பினரால் கூறப்படும் குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை என்று பணியகத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.


தற்போது இந்த வேலை வாய்ப்புகளை பணியகம் இழந்துள்ளதாக சம்பந்தப்பட்ட தரப்பினர் குற்றம் சுமத்தியுள்ளனர். அப்படி எதுவும் நடக்கவில்லை, ஒப்பந்தம் அமுல்படுத்தப்படவில்லை, தொழில் வாய்ப்புகள் சட்டப்பூர்வமாக இல்லை என்பதை பணியகத்தின் தலைவர் கோசல விக்கிரமசிங்க வலியுறுத்துகிறார்.

இதற்கிடையில், சில வேலைவாய்ப்பு நிறுவனங்கள் இந்த வேலைகளுக்காக பணம் கோருவதும், கடவுச்சீட்டுக்களை கோருவதும் சட்டவிரோதமானது என்றும் அவர் கூறுகிறார்.

அத்தகைய நபர்கள் அல்லது நிறுவனங்களுக்கு பணம் அல்லது கடவுச்சீட்டை வழங்குவதைத் தவிர்க்குமாறு அவர் மக்களை அறிவுறுத்தியுள்ளார்.

அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட 'புலம்பெயர்ந்தோர் குரல்' வலையமைப்பின் பிரதிநிதிகள், கடந்த அரசாங்க காலத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பில் பல ஊழல்கள் மற்றும் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்தனர்.

தென்கொரியா மட்டுமின்றி இஸ்ரேலிலும் வேலை வாய்ப்பு வழங்குவதில் பாரிய அளவில் முறைகேடுகள் நடந்துள்ளதுடன், புலம்பெயர் தொழிலாளர்களுக்கு சலுகை அளிப்பதாக கூறி இங்கு மின்சார கார்களை இறக்குமதி செய்வதிலும் முறைகேடுகள் நடந்துள்ளன.இது குறித்து ஆராயந்து சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று  'புலம்பெயர்ந்தோர் குரல்' வலையமைப்பின்   பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

இதேவேளை, விவசாயம் மற்றும் அது தொடர்பான தொழில் வாய்ப்புகளுக்கு இலங்கைக்கு ஆதரவளிக்க கொரிய சிறு தொழில் முனைவோர் சங்கம் தயாராக உள்ளது.

மேலும், மீன்பிடித் தொழிலுக்கு தேவையான தொழில்நுட்ப ஆதரவு மற்றும் பயிற்சியை எளிதாக்க கொரிய சிறு தொழில் முனைவோர் சங்கம் ஒப்புக்கொண்டுள்ளது.

கொரிய சிறு வர்த்தக சங்கத்தின் பிரதிநிதிகள் குழுவிற்கும் ஜனாதிபதி அலுவலக அதிகாரிகளுக்கும் இடையில் (13) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

இக்கலந்துரையாடலில், இலங்கைத் தொழிலாளர்களுக்கு கொரியாவில் மீன்பிடித் தொழிலுக்கான பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புகளை வழங்குவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டதுடன், கொரியாவின் சிறு தொழில் முனைவோர் சங்கத்தின் தலைவர் கிம் சுங் ரியோங்  (Kim Chung Ryong) உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image