மத்துரட்ட பெருந்தோட்டம் பிரவுண்ஸ் கம்பனி நிர்வாகத்தின் கீழ் இயங்கும் ஹைபொரஸ்ட் தோட்டம் இரண்டு பிரிவுத் தொழிலாளர்களின் பணி பகிஷ்கரிப்பு முடிவுக்கு வந்தது.
தொழிலாளர்கள் கடந்த 9 ஆம் திகதி முதல் பத்து நாட்களாக தோட்ட நிர்வாகத்துக்கு எதிராக பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுவந்தனர்.
இந்நிலையில், நுவரெலியா மாவட்ட தொழில் திணைக்களத்தில் கடந்த திங்கட்கிழமை (19) இடம்பெற்ற சுமுகமான பேச்சுவார்த்தையின் பின் பணி பகிஷ்கரிப்பு முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. .
நுவரெலியா மாவட்ட உதவித் தொழில் உதவி ஆணையாளர் உப்பாலி வீரசிங்க முன்னிலையில் மாவட்ட செயலக மண்டபத்தில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில், தொழிற்சங்க பிரமுகர்கள்,தோட்ட முகாமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் பங்கேற்றிருந்தனர்.
பேச்சுவார்த்தையில் 60 சதவீத பிரச்சினைகளுக்கு இணக்கப்பாடு எட்டியதையடுத்து பணி பகிஷ்கரிப்பு முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
இந்த பேச்சுவார்த்தையில் ஹைபொரஸ்ட் தோட்ட தொழிலாளர்களின் பிரச்சினைகளை தொழில் திணைக்களத்திற்கு முன்மொழிந்த பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்க பொது செயலாளருமான வடிவேல் சுரேஸ்,சங்கத்தின் நிர்வாக செயலாளர் எஸ்.பி.விஜயகுமார் உள்ளிட்ட பிரதநிதிகள் கலந்து கொண்டனர்.
அத்துடன் இந்த பேச்சுவார்த்தையில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணி தலைவருமான வீ.இராதாகிருஷணன் உள்ளிட்ட முன்னணி பிரதிநிதிகள், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மாநில இயக்குனர் எம்.இராஜாராம், உள்ளிட்ட மாவட்ட,மாநில பிரதிநிதிகள், இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி சார்பில் பிரதிநிதி பிரான்சிஸ் ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.