அதிபர், ஆசிரியர்களின் வங்கிக் கடனுக்கான வட்டி அதிகரிப்பு

அதிபர், ஆசிரியர்களின் வங்கிக் கடனுக்கான வட்டி அதிகரிப்பு

அதிபர், ஆசிரியர்கள், மக்கள் வங்கியில் பெற்றுக்கொண்ட கடனுக்கான வட்டி அதிகரிக்கப்பட்டமை தொடர்பாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் மக்கள் வங்கியின் தலைவருக்கு கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளதாக சங்கத்தின் தேசிய அமைப்பாளர் சுந்தரலிங்கம் பிரதீப்  தெரிவித்துள்ளார்.

அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
மக்கள் வங்கியில் அரச ஊழியர்களான ஆசிரியர் மற்றும் அதிபர்கள் முன்பு பெற்ற கடனுக்கான இணங்கிய கடன் வட்டிக்கான தொகை மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக உங்கள் வங்கிக் கிளைகளின் முகாமையாளர்கள் ஊடாக, அதிபர், ஆசிரியர்கள் அதேபோன்று ஓய்வூதியம் பெற்ற அதிபர் ஆசிரியர்களுக்கும் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 
விலைவாசி உயர்வு நீர் மற்றும் மின்சார கட்டணம் உயர்வு போக்குவரத்து கட்டணம் உயர்வு போன்ற தாங்கிக் கொள்ள முடியாத வாழ்க்கைச் செலவுக்கு மத்தியில் வாழ்ந்து வரும் நிலையில் அதற்கு சமனாக சம்பள உயர்வோ  கொடுப்பனவோ வழங்கப்படாத நிலையில் வாழ்வாதாரத்திற்கான சம்பளம் கிடைக்கப் பெறாத சூழலில் அதிபர் ஆசிரியருக்கான வட்டி வீதம் அதிகரிக்கப்பட்டமையானது மரத்திலிருந்து விழுந்தவனை மாடு முட்டியது போன்றுள்ளது.
அசாதாரணமானதும் மற்றும் முறையற்றதுமான இவ்வட்டி வீதம் அதிகரிக்கப்படுகின்றமை தொடர்பாக  தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், அதிகரிக்கப்பட்ட வட்டியை செலுத்துவதற்கு அதிபர் மற்றும் ஆசிரியர்களுக்கு முடியாது என்பதை அறிய தருகின்றோம் 
 
நாட்டில் ஆட்சியாளர்களின் முட்டாள்தனம் மற்றும் மோசடி திருட்டு ஊழல் நடவடிக்கைகளால் நாட்டில் வங்கி அமைப்பில் நிதியின் நிலையற்ற தன்மையை சீர் செய்வதற்காக உங்கள் வங்கியில் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளும் இந்நாட்டின் அப்பாவி தொழில் புரிவோர் தொழிலாளர்கள் உட்பட சாதாரண மக்களின் கடன் வட்டியை அதிகரித்து அறவிடப்படும் போர்வையில், பலர் சிரமத்திற்கு மத்தியில் உழைத்த சொற்ப பணத்தையும் கொள்ளையடிக்கும் செயலுக்கு நீங்கள் உட்பட வங்கியாளர்கள் உடன்படுகின்றீர்கள். 
உங்கள் வங்கியில் பாரிய அளவில் கடன் பெற்று தொழில் அதிபர் போல் நடித்து கொண்டிருக்கும் அரசியல்வாதிகளும் அவர்களது கூட்டாளிகளும் பெற்ற கடனை திருப்பி செலுத்தாமல் இருக்கும் நிலையில் அவர்களுடைய கடனை தள்ளுபடி செய்கின்ற நீங்கள் உங்கள் வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் அப்பாவி மக்கள் கடனை தவறாது செலுத்தி வருகின்ற போதும் அவர்களுக்கான வட்டி வீதத்தை அதிகரித்தமை எந்த விதத்தில் நியாயம் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்
 
 அண்மையில்
 உங்கள் வங்கியால் தவணை கடன் தள்ளுபடி தொகையாக 5,400 கோடிக்கு மேல் இருப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் அரசியல் அரசியல் சார்பு தொழில் அதிபர்களின் மிக பெரிய கடன் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மையே.
 
 மத்திய வங்கியை நெருக்கடிக்குள் உட்படுத்தியது உங்கள் நம்பிக்கைக்குரிய பாரிய அளவிலான பணத்தை பெற்றுக்கொண்ட அரசியல் தொடர்புடைய வியாபாரிகளே ஆவர். எனினும் மிக  சொற்ப கடனை பெற்றுக் கொண்டு தவணையை தவறாது செலுத்தும் அதிபர்கள் ஆசிரியர்கள் இந்தப் பிரச்சினைக்கு பொறுப்பு அல்ல என்பதை நீங்கள் அறிவீர்கள் .
 
எனவே அதிபர்கள் ஆசிரியர்கள் பெற்றுக் கொண்ட கடனுக்கான நியாயமற்ற மற்றும் அநீதியான வட்டி அதிகரிப்பை மேற்கொள்ள வேண்டாம் என கேட்டுக் கொள்வதோடு இது தொடர்பாக சாதகமான பதிலை வழங்கவிட்டால் நாம் தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்க நேரிடும் என அறிய தருகின்றோம். 
 
இப் பிரச்சினையை நியாயமான முறையில் தீர்த்துக் கொள்வதற்காக தொழில் தொழிற்சங்கத்துடன் கலந்துரையாடல்களுக்கு சந்தர்ப்பம் வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றோம் என கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதாக சங்கத்தின் தேசிய அமைப்பாளர் சுந்தரலிங்கம் பிரதீப் குறிப்பிட்டுள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image