குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான நலன்புரி கொடுப்பனவுகளை வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் நிதி, பொருளாதார உறுதிப்பாட்டு, தேசிய கொள்கைகள் அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.
வறுமையானவர்கள், பாதிக்கப்பட்ட தரப்பினர் உள்ளடங்கலாக நான்கு பிரிவுகளின் கீழ் இந்த நலன்புரி கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளதாக வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, பாதிப்பிற்குள்ளானோருக்கான பிரிவில் 4 இலட்சம் குடும்பங்களுக்கு மாதாந்தம் 2,500 ரூபா கொடுப்பனவு ஜூலை முதலாம் திகதி முதல் டிசம்பர் 31 ஆம் திகதி வரை வழங்கப்படவுள்ளது.
குறிப்பிடத்தக்க அளவு பாதிப்பிற்குள்ளானோருக்கான பிரிவில் 4 இலட்சம் குடும்பங்களுக்கு மாதாந்தம் 5,000 ரூபா கொடுப்பனவு அடுத்த ஆண்டு மார்ச் 31 ஆம் திகதி வரை வழங்கப்படவுள்ளது.
வறியோருக்கான பிரிவில் 8 இலட்சம் குடும்பங்களுக்கு மாதாந்தம் 8, 500 ரூபா வீதம் 3 வருடங்களுக்கு இந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.
மிகவும் வறுமைக்குள்ளானோருக்கு 4 இலட்சம் குடும்பங்களுக்கு மாதாந்தம் 15,000 வீதம் 3 வருடங்களுக்கு இந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.
அத்துடன், உதவி பெறுகின்ற மாற்றுத் திறனாளிகள், சிறுநீரக கொடுப்பனவு பெறுவோர் ஆகியோருக்கு மாதாந்தம் மேலதிகமாக 5,000 ரூபாவும், முதியோருக்கான கொடுப்பனவை பெறுவோருக்கு மாதாந்தம் மேலதிகமாக 2 ,000 ரூபாவும் வழங்கப்படவுள்ளது.
இந்த நலன்புரி கொடுப்பனவுகளுக்காக 37 இலட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்தன.