உள்ளுராட்சி மன்றத் தேர்தல், திகதி நிரணயமின்றி மீண்டும் பிற்போடப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த மார்ச் மாதம் 9ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்ருந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலை, எதிர்வரும் 25 ஆம் திகதி நடத்த, மறுதிகதியிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாக்கவின் கையொப்பத்துடன் நேற்று (11) தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில், குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தலுக்கு அவசியமான நிதி ஏற்பாடுகள் கிடைக்காமை மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட விதத்திலான விடயங்கள் காரணமாக, எதிர்வரும் 25 ஆம் திகதி நடத்தப்படவிருந்த தேர்தலை இரண்டாவது முறையும் ஒத்திவைக்க வேண்டியுள்ளதாக, அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு தேவையான நிதி கிடைக்கப்பெறுகின்ற குறிப்பான திகதி அல்லது உயர்நீதிமன்றத்தின் முன்னால் காணப்படுகின்ற வழக்குகளுக்கு அமைய, நீதிமன்றத்தால் வழங்கப்படுகின்ற தீர்ப்பின் அடிப்படையில், ஒரு திகதியைத் தீர்மானிக்க வேண்டிவரின், அந்தத் திகதிகளில், முதலில் வரக்கூடிய தினத்தன்று, தேர்தலை நடத்துவதற்கான திகதியைத் தீர்மானித்தல், தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவுறுத்தலைப் பெற்றுக்கொண்டதன் பின்னர், மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்களினால் மேற்கொள்ளப்படவுள்ளது.
எவ்வாறாயினும், தேர்தல்கள் ஆணைக்குழு, உள்ளுராட்சி மன்றத் தேர்தலை துரிதமாக நடத்துவதற்கு எடுக்க முடிந்த அனைத்து செயற்பாடுகளையும் தொடர்ச்சியான முன்னெடுத்துச் செல்லும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.