உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ள பெற்றோலிய கூட்டுத்தாபன சுதந்திர ஊழியர்கள் சங்கம்!
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான பங்குகளை விற்பனை செய்வதற்கு எதிராக இன்று (27) உண்ணாவிரதம் ஆரம்பித்துள்ளதாக கூட்டுத்தாபனத்தின் சுதந்திர ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இன்று காலை 7 மணி தொடக்கம் இவ்வுண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் ஜகத் விஜேகுணரத்ன தெரிவித்துள்ளார்.
தற்போது பெற்றோலியக் கூட்டுத்தாபனம் லாபம் பெற்று வருகிறது. இவ்வாறு இருக்கையில் கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான 600 எரிவாயு நிலையங்களை காரணமின்றி வெளிநாட்டு நிறுவனங்களிடம் ஒப்படைக்கப் முயற்சிக்கின்றனர். இந்த கொடுக்கல் வாங்கல்தான் இவ்வருடத்தில் இடம்பெறும் பாரிய முறைக்கேடான கொடுக்கல் வாங்கலாகும். ஏனென்றால் இக்ெகாடுக்கல் வாங்கலினால் நாட்டுக்கு ஒரு டொலர் கூட கிடைக்கப்போவதில்லை. விரைவில் இதற்கான அமைச்சரவைப் பத்திரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. எனவே இந்த தேசத்துரோக செயலுக்கு எதிரான செயற்பாட்டை இன்று உண்ணாவிரத்துடன் ஆரம்பிக்கிறோம். எந்தவிதமான கட்சி, தொழிற்சங்க பேதமும் இன்றி அனைவரும் பெற்றோலியம் கூட்டுத்தாபனத்தையும் எமது தொழிலையும் பாதுகாக்க ஒன்றிணைவோம் என்று அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறோம் என்றும் ஜகத் விக்கிரமசிங்க தெரிவித்தார்.