பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய முறைக்கு எதிராக தொழிற்சங்க நடவடிக்கை!
எதிர்காலத்தில் அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்படும் ஊழியர்களுக்கு பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய முறையை அறிமுகப்படுத்த அமைச்சரவை மேற்கொண்டுள்ள தீர்மானத்தை நீக்காவிடின் வருகிற வாரம் அனைத்து அரச ஊழியர்களும் இணைந்து பாரிய பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாளை (02) ஜனாதிபதி மற்றும் அரச நிருவாக அமைச்சுக்கு எழுத்து மூலம் இவ்விடயம் தொடர்பில் தெரிவிக்கப்படவுள்ளதாக அரச அதிகாரிகள் தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைவர் சுமித் கொடிகார தெரிவித்துள்ளார்.
அமைச்சரவையினால் மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானத்திற்கு அமைய தேசிய பங்களிப்பு ஓய்வூதியம் என்ற பெயரில் நிதியமொன்றை நிறுவப்படவுள்ளதுடன் அதற்கு ஊழியரின் பங்களிப்பாக 8 வீதமும் தொழில் வழங்குநர் பங்களிப்பாக 12 வீதமும் வைப்பிலிட வேண்டும். இவ்வாறு செயற்படுத்தப்படவுள்ள புதிய ஓய்வூதிய முறையானது சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கமைய செயற்படுத்தப்படவுள்ளதாகவும் எந்த சந்தர்ப்பத்திலும் அதனை செயற்படுத்த அனுமதிக்கப்போவதில்லை என்றும் சுமித் கொடிகார தெரிவித்துள்ளார்.