அரச ஊழியர்களின் கவனத்திற்கு: ரயில் சேவைகள் தொடர்பான அறிவிப்பு
இன்றைய தினம் நாட்டில் 60க்கும் மேற்பட்ட ரயில் சேவைகள் இரத்துச் செய்யப்படலாம் என இலங்கை ரயில்வே நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஏறக்குறைய 500 ஊழியர்கள் கடந்த 31ம் திகதியுடன் ஓய்வு பெற்றதையடுத்து நேற்றும் பல ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டிருந்தன.
சரியான தொகையை கணிக்க முடியாது என்ற நிலையில், அதிக எண்ணிக்கையிலான ரயில் சேவைகள் ரத்தாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஒப்பந்த அடிப்படையில் ஓய்வுபெற்ற ஊழியர்களை உள்வாங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இறுதி நேரத்திலேயே அரசாங்கம் அதற்கான அறிவித்தலை விடுத்தது. எனினும் அதற்கான உத்தியோகப்பூர்வ அறிவிப்பு இதுவரை கிடைக்கப்பெறவில்லை.
எனவே, பல ரயில் சேவைகளை முன்னெடுக்க ரயில் நிலைய அதிபர்களது பற்றாக்குறை நிலவுகின்றது. அத்துடன், உள்வாங்கப்பட்ட நியமனங்களும் இன்னும் நிரந்தரமாக்கப்படாதுள்ளன.
எனவே இன்று முதல் பல ரயில் சேவைகள் இடைநிறுத்தப்படக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரட்ன குறிப்பிட்டுள்ளார்.
மூலம் - சூரியன் செய்திகள்