புத்தாண்டில் அமுலாகியுள்ள வருமான வரி தொடர்பில் நீங்கள் அறிவீர்களா?
ஒரு இலட்சம் ரூபாவுக்கு மேற்பட்ட வருமானத்தைப் பெறுவோரின் வருமானம் அடிப்படையிலான வரி அறவிடுதல் நேற்று (01) தொடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது..
6 பிரிவுகளின் கீழ் வரி அறவிடும் முறை முன்னெடுக்கப்படவுள்ளது. சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட உள்நாட்டு இறைவரி திருத்தச் சட்டத்தின் கீழ் மாதாந்த வருமானம் ஒரு இலட்சம் ரூபாவுக்கு மேற்படும் பட்சத்தில் 6 சதவீதம் தொடக்கம் 36 சதவீதம் வரையில் 6 பிரிவுகளின் கீழ் வரி அறவிடப்படவுள்ளது.
இதற்கமைய, ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா சம்பளம் பெறுபவரிடம் 3 ஆயிரத்து 500 ரூபா வரியாக அறவிடப்படவுள்ளது.
2 இலட்சம் ரூபா சம்பளம் பெறுபவரிடம் 10 ஆயிரத்து 500 ரூபாவும், 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா சம்பளம் பெறும் நபரிடம் 21 ஆயிரம் ரூபாவும், வருமான வரியாக அறவிடப்படவுள்ளது.
3 இலட்சம் ரூபா மாதாந்த சம்பளம் பெறும் நபரிடம் 35 ஆயிரம் ரூபா வரியாக அறவிடப்படவுள்ளதுடன், 3 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா சம்பளம் ஈட்டுபவர் 52 ஆயிரத்து 500 ரூபாவை வருமான வரியாக செலுத்த வேண்டும்.
4 இலட்சம் ரூபா சம்பளம் பெறுபவர், 70 ஆயிரத்து 500 ரூபாவும், 5 இலட்சம் ரூபா வருமானம் பெறும் நபர் 1 இலட்சத்து 6 ஆயிரத்து 500 ரூபாவையும் வருமான வரியாக செலுத்த வேண்டும்.
7 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவை வருமானம் பெறும் நபர் ஒரு இலட்சத்து 96 ஆயிரத்து 500 ரூபாவும், 10 இலட்சம் ரூபா வருமானம் பெறுபவர் 2 இலட்சத்து 86 ஆயிரத்து 500 ரூபா வருமான வரியாக செலுத்த நேரிடும்.
எவ்வாறாயினும் ஒரு இலட்சம் ரூபாவுக்கும் குறைந்த சம்பளம் பெறும் தனிநபருக்கு இந்த வருமான வரி விதிப்பு தாக்கம் செலுத்தாது நிதியமைச்சு அறிவித்துள்ளது.