பட்டதாரிகளுக்கு அரச வேலை வாய்ப்புகளை வழங்குவதிலுள்ள பிரச்சினைகள் குறித்தும் கவனம்
“தேசிய இளைஞர் தளம்” நாட்டின் எதிர்காலம் பற்றிய தமது நோக்கை அரசாங்கத்திற்கு முன்வைக்க இளைஞர்களுக்கு கிடைக்கும் ஒரு சிறந்த சந்தர்ப்பமாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அடுத்த வருடம் கொண்டாடப்படவுள்ள 75 ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்துடன் இணைந்து உருவாக்கப்படவுள்ள தேசிய இளைஞர் தளத்துக்கு, (National youth Platform) பல்கலைக்கழக மாணவர்களின் பங்களிப்பு தொடர்பில் நேற்று (13) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
நிகழ்ச்சித் திட்டம் தொடர்பான பூர்வாங்கத் திட்டம், இளைஞர் விவகாரம் மற்றும் நிலையான அபிவிருத்திக்கான ஜனாதிபதியின் பணிப்பாளர் ரந்துல அபேவீரவினால் முன்வைக்கப்பட்டதுடன், பல்கலைக்கழக உபவேந்தர்கள் இது தொடர்பான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் முன்வைத்தனர். நாட்டின் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் இன்றைக்கு அல்லாமல், அடுத்த 25 வருடங்களுக்காகவே தயாரிக்கப்பட வேண்டும் என்றும் அதற்காக இளைஞர்களின் பங்களிப்பு அதிகபட்சமாக பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்த ஜனாதிபதி, இன்னும் 25 வருடங்களில் சுதந்திரத்தின் நூற்றாண்டு விழாவை நாம் கொண்டாடும் போது, நாட்டின் இளைஞர்கள் இந்த நாட்டின் தலைவர்களாக இருப்பார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
எனவே, இளைஞர்கள் தாங்கள் விரும்பும் அபிவிருத்தியடைந்த நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக, தேசிய இளைஞர் தளத்தின் ஊடாக தமது நோக்கு, திட்டங்கள் மற்றும் ஆக்கத்திறன்களை அரசாங்கத்திற்கு முன்வைக்க முடியும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். இதேவேளை, இலங்கையில் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் நோக்கில் கொழும்பு, காலி, யாழ்ப்பாணம், கண்டி மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் பல்கலைக்கழக மாணவர்களின் பங்களிப்புடன் செயற்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, அந்த மாவட்டங்களில் உள்ள சுற்றுலாத் தலங்களைக் கண்டறிந்து, அவற்றை சுற்றுலா வலயங்களாக மேம்படுத்துவது தொடர்பான திட்டங்களையும் முன்மொழிவுகளையும் இளைஞர்களுக்குச் சமர்ப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக அடுத்த வருடம் புதிய சுற்றுலாக் கொள்கையொன்று அறிமுகப்படுத்தப்படும் என்றும் குறிப்பிட்டார்.
இந்நாட்டில் உள்ள பல்கலைக்கழக கட்டமைப்பை, புதிய பாதைக்கு வழிநடத்தும் வகையில் எதிர்காலத்தில் அமுல்படுத்தப்படவுள்ள திட்டங்கள் குறித்து ஜனாதிபதி, உபவேந்தர்களுக்கு தெளிவுபடுத்தியதுடன், பகிடிவதைகளை தடுப்பதற்கான ஒழுங்கமைக்கப்பட்ட வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறும் ஆலோசனை வழங்கினார். பட்டதாரிகளுக்கு அரச வேலை வாய்ப்புகளை வழங்குவதில் உருவாகியுள்ள பிரச்சினைகள் குறித்தும் கவனம் செலுத்திய ஜனாதிபதி, புதிய தொழில் சந்தைக்கு ஏற்ற வகையில் பல்கலைக்கழக மாணவர்களின் திறன்களை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டங்கள் மற்றும் பயிற்சி நெறிகளை அறிமுகப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் விளக்கினார்.
இலங்கையை பிராந்தியத்தின் கல்விக் கேந்திர நிலையமாக மாற்றுவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டது. இதன் மூலம் இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான் உள்ளிட்ட பிராந்திய நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு இந்நாட்டு பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் வாய்ப்பை வழங்க முடியும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். மேலும், குருநாகல் மாவட்டத்தில் மற்றுமொரு அரச பல்கலைக்கழகம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.