பேராதனை பல்கலைக்கழக கலைப்பீட விரிவுரையாளர்கள் தொழிற்சங்க நடவடிக்கை
பேராதனை கலைப்பீட விரிவுரையாளர்கள் சங்கம், இன்று முதல் எதிர்வரும் 18 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை பணிப்புறக்கணிப்பை அறிவித்துள்ளது.
விரிவுரையாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கு பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாப்பான சூழல் இல்லை எனக்கூறி அவர்கள் இந்த பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கின்றனர்.
இதற்கமைய, இன்று முதல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை அனைத்து பரீட்சை தொடர்பான நடவடிக்கைகள் உட்பட அனைத்து பணிகளில் இருந்தும் அவர்கள் விலகவுள்ளனர்.
பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் அதுல சேனாரத்ன மீதான தாக்குதல் தொடர்பில், அவசியமான காவல்துறை முறைப்பாடுகளை மேற்கொள்வதற்கு அவசியமான நடவடிக்கைகளை பல்கலைக்கழக நிர்வாகம் தவறியுள்ளதாக அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
அத்துடன் சம்பவத்துடன் தொடர்புடைய சில மாணவர்களின் நடவடிக்கைகளை தொடர்பிலும் நிர்வாகம் நடவடிக்கைகளை முன்னெடுக்க தவறிவிட்டதாகவும் கலைப்பீட விரிவுரையாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
எனவே, மாணவர்கள் சட்டத்தை கையில் எடுப்பதைத் தடுப்பதற்கும், பல்கலைக்கழக சொத்துக்களைப் பாதுகாப்பது, சம்பந்தப்பட்ட நிர்வாகங்களின் முன்னுரிமையாக இருப்பதை உறுதி செய்வதற்கும், தமது பணிநிறுத்தம் முதல் படியாக இருக்கும் என்று பேராதனை பல்கலைக்கழக கலைப்பீட விரிவுரையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.