அரச ஊழியர் ஆட்சேர்ப்பு தொடர்பில் அறிவித்தல்

அரச ஊழியர் ஆட்சேர்ப்பு தொடர்பில் அறிவித்தல்

எதிர்வரும் வருடத்திற்கு அரச சேவைக்கு அத்தியாவசியமான நிபுணர்களை மாத்திரம் சிரேஷ்ட அதிகாரிகள் அடங்கிய குழுவின் பரிந்துரைக்கு அமைய இணைத்துக்கொள்ளப்படுவார்கள் என்று பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்னே தெரிவித்தார்.

பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்கவின் தலைமையில் நிபுணர்கள் குழு இயங்கும். எந்தெந்த துறைக்கு ஆட்சேர்ப்பு அவசியம் என்பதை இக்குழு தீர்மானிக்கும்.

தற்போது அரச சேவையில் ஈடுபட்டுள்ள ஊழியர்களை கருத்திற்கொண்டு ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்படும். அதன்படி, இந்தக் குழு தேவையான ஆட்சேர்ப்புகள், ஓய்வூதியங்கள் மற்றும் அத்தகைய ஓய்வுக்குப் பிறகு புதிய ஆட்சேர்ப்பு தேவைப்படும் பகுதிகள் குறித்து தேவையான பரிந்துரைகளை வழங்கும்.

ஓய்வூதிய வயதை 60 ஆக குறைக்க அரசு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், பல்வேறு துறைகளில் உள்ள சுமார் 25,000 அரச அதிகாரிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் ஓய்வு பெறவுள்ளனர். அதற்கமைய வெற்றிடங்களுக்கு சேவையை தொடரும் நோக்கத்துடன் இக்குழுவின் பரிந்துரைகளுக்கமைய ஆட்சேர்ப்பு செய்யப்படும்.

அரச நிறுவனங்களுக்கு புதிய ஆட்சேர்ப்புகளை மேற்கொள்ள வேண்டாம் என கடந்த மாதம் நிறுவனங்களின் தலைவர்களுக்கு அரசாங்கம் அறிவித்திருந்ததாகவும், தற்போதுள்ள நிலைமையை கருத்திற்கொண்டு அரசாங்கத்தின் செலவினங்களைக் குறைக்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் செயலாளர் தெரிவித்தார்.

இதன்படி, அமைச்சர்கள் குழுவினால் நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளின் பேரில், அத்தியாவசிய பொதுச் சேவைகளை தொடர்வதற்கு தேவையான ஆட்சேர்ப்புகளை பரிசீலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image