அரச அடக்குமுறைகளை உடனடியாக நிறுத்துக

அரச அடக்குமுறைகளை உடனடியாக நிறுத்துக

அரசாங்கத்தின் அடக்குமுறைகளை உடனடியாக முடிவிற்குக்கொண்டுவாருங்கள்: விரைவாகப் பாராளுமன்றத்தைக் கலையுங்கள்' என வலியுறுத்தி கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவில் ஆரம்பமான பேரணி சுதந்திர சதுக்கத்தைச் சென்றடைந்ததுடன், அங்கு சர்வமதத்தலைவர்களின் முன்னிலையில் பிரதான 8 விடயங்களை உள்ளடக்கிய 'மக்களாணை' வெளியிடப்பட்டது.

தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் கூட்டிணைவு உள்ளிட்ட அமைப்புகளால், கொழும்பின் சில இடங்களில் நேற்று எதிர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

அதன்படி கொழும்பில் விஹாரமகாதேவி பூங்காவிற்கு அண்மையில் பிற்பகல் 2.30 மணியளவில் ஆரம்பமான பேரணி, நகர மண்டபம் ஊடாக சுதந்திர சதுக்கத்தை நோக்கிப் பேரணியாகச் சென்றனர்.

இப்போராட்டத்தில் தொழிற்சங்கவாதிகள், சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், சர்வமதத்தலைவர்கள், இளைஞர்-யுவதிகள், வெள்வேறு துறைசார்ந்தோர் மற்றும் சாதாரண பொதுமக்கள் உள்ளிட்ட பெருமளவானோர் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது 'ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அடக்குமுறைகளை உடனடியாக முடிவிற்குக்கொண்டுவாருங்கள்', 'கைதுசெய்யப்பட்ட போராட்டக்காரர்கள் விடுதலை செய்யப்படவேண்டும்', 'அரசே! மக்களுக்கு உரிய நிவாரணத்தை வழங்கு', 'பாராளுமன்றத்தை உடனடியாகக் கலையுங்கள்' என்பன உள்ளடங்கலாக அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டக்காரர்களால் கோஷங்கள் எழுப்பட்டதுடன், அதனையொத்த வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளையும் அவர்கள் ஏந்தியிருந்தனர்.

போராட்டக்காரர்கள் பேரணியாக சுதந்திர சதுக்கத்தை சென்றடைந்ததைத் தொடர்ந்து, அங்கு சர்வமதத்தலைவர்களின் முன்னிலையில் பிரதான 8 விடயங்களை உள்ளடக்கிய 'மக்களாணை' வெளியிடப்பட்டது.

01. ரணில் - ராஜபக்ஷ அரசாங்கத்தின் அடக்குமுறைகள் நிறுத்தப்படவேண்டும்.
02. கைதுசெய்யப்பட்ட போராட்டக்காரர்கள் விடுதலைசெய்யப்படவேண்டும்.

03. பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் அவசரகால நிலைப்பிரகடனம் உள்ளிட்ட மோசமான சட்டங்கள் நீக்கப்படவேண்டும்.

04. மக்களுக்கு நிவாரணத்தைப் பெற்றுக்கொடுப்பதற்கு ஏற்றவாறான செயன்முறை தயாரிக்கப்படவேண்டும்.

05. மக்களின் சொத்துக்களை விற்பனை செய்வது நிறுத்தப்படவேண்டும்.

06. அரசியலமைப்பிற்கான 19 ஆவது திருத்தத்தில் உள்ள குறைபாடுகள் நீக்கப்பட்டு நிறைவேற்றதிகாரம் பாராளுமன்றத்திற்குப் பகிரப்படக்கூடியவகையில் புதிய அரசியலமைப்பொன்றைத் தயாரிப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும்

07. குறுகியகால அடிப்படையில் காபந்து அரசாங்கமொன்று ஸ்தாபிக்கப்படவேண்டும்.

08. வெகுவிரைவில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டுப் பொதுத்தேர்தல் நடத்தப்படவேண்டும்.

என்ற 8 விடயங்களும் அந்த மக்களாணையில் உள்ளடங்கியுள்ளன.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image