மட்டுக்கலை தோட்ட தொழிலாளர்கள் சத்தியாகிரக போராட்டத்தில்.

மட்டுக்கலை தோட்ட தொழிலாளர்கள் சத்தியாகிரக போராட்டத்தில்.

தலவாக்களை, லிந்துலை - மட்டுக்கலை தோட்டத்தைச் சேர்ந்த சுமார் 200ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் (28.07.2022) வியாழக்கிழமை பணி பகிஷ்கரிப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.


தோட்ட நிர்வாகம் தொழிலாளர்களுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டிய உரிமைகள் மற்றும் சலுகைகளை முறையாக பெற்றுக் கொடுக்காது பின்வாங்கியதனால் தொழிலாளர்கள் பணி பகிஷ்கரிப்பு போராட்டத்தை மேற்கொண்டனர்.

இவ்விடம் தொடர்பில், தோட்ட முகாமையாளருக்கும் தொழிலாளர்களுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் பொருத்தமான முடிவுகள் எட்டப்படாத நிலையில் தொழிலாளர்கள் மட்டுக்கலை தேயிலை தொழிற்சாலைக்கு முன்பாக அடையாள சத்திய கிரகப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

'தற்போது கொழுந்து விளைச்சல் குறைவாக உள்ள நிலையில் தமக்கு 18 கிலோகிராம் தேயிலை கொழுந்தை பறிக்க முடியாத நிலை காணப்படுவதால் தாம் பறிக்கும் கொழுந்து நிறைக்கு ஏற்ப முழுநாள் சம்பளத்தை வழங்க வேண்டும்' என்றும், 'காலை 7 மணிக்கு தொழிலுக்கு செல்லும் தொழிலாளர்களுக்கு பகல் உணவு பெற்றுக் கொள்ள 12 மணிக்கு விடுமுறை வழங்க வேண்டும்' என்றும்,
போன்ற கோரிக்கைகளை முன்வைத்தே இந்த அடையாள சத்தியகிரக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தமது கோரிக்கைகள் தொடர்பில் நியாயமான முடிவுகள் பெற்றுக் கொடுக்கும் வரை தாம் தொடர்ச்சியான வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கப் போவதாக சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுப்பட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
இந்த விடயம் தொடர்பாக தோட்ட முகாமையாளரை தொடர்பு கொண்டு வினவியபோது, முன்னெடுக்கப்பட்ட போராட்டம் தொடர்பாக எவ்வித அறிவித்தலும் தமக்கு வழங்கவில்லை எனவும் தொழிற்சங்கத்திற்கும் அறிவிக்கவில்லை என தமக்கு அறிய கிடைத்தாகவும் தெரிவித்தார்.

தற்போதய நிலையில் ஒவ்வொரு தொழிலாளியும் 18 கிலோகிராம் தேயிலை கொழுந்து பறித்தால் மாத்திரமே அவர்களுக்கான முழுமையான சம்பளத்தை பெற்றுக் கொடுக்க முடிவதோடு தோட்டத்தையும் முறையாக நடத்திச் செல்ல முடியும் என அவர் தெரிவித்தார், மேலும் தோட்டத்தில் உள்ள சிலர் தங்களுடைய இலாபத்துக்காக இவ்வாறு முரண்பாடாக செயல்படுகின்றனர் எனறும் தெரிவித்தார்.

தோட்டத்தில் உள்ள தொழிலாளர்களையும் தோட்டத்தையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு தன்னிடம் உள்ளது கடந்த காலங்களில் தொழிலாளர்கள் எவ்வித பிரச்சனைகள் இல்லாமல் தொழில் செய்து நல்ல சம்பளத்தையம் பெற்றுக் கொண்டார்கள். மேலும் அவர்களுக்கு தேவையான சலுகைகளை தோட்ட நிர்வாகம் வழங்கி வருவதாகவும் தெரிவித்தார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image