திடீர் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ள ரயில் திணைக்கள ஊழியர்கள்!
திடீர் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக ரயில் சேவையை கட்டியெழுப்புவதற்கான தொழிச்ஙகத்தின் அமைப்பாளர் இந்திக்க தொடங்கொட தெரிவித்துள்ளார்.
சகோதர மொழி இணையதளமான 'வெடபிம'வுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்விடயத்ததை தெரிவித்துள்ளார்.
ரயில் திணைக்கள ஊழியர்களுக்கான போக்குவரத்து வசதிகளை பெற்றுக் கொள்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் காரணமாக, குறித்த நேரத்திற்கு பணிக்கு வரும் வகையில், நெருக்கடிக்கு தீர்வாக எரிபொருள் வழங்குமாறு திணைக்களத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. எனினும் எவ்வித திட்டமிடலுமின்றி எரிபொருள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டமையினால் அனைத்து ஊழியர்களும் எரிபொருள் வரிசையில் இணையவேண்டியேற்பட்டுள்ளது. இந்நிலைக்கு ரயில் திணைக்கள பொது முகாமையாளர் பொறுப்பெடுக்க வேண்டும். திட்டமிடல் இன்மையின் காரணமாக இந்நிலை ஏற்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சில ரயில் திணைக்கள தொழிற்சங்கங்களினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள இத்தொழிற்சங்க நடவடிக்கையில், ரயில் சாரதிகள் மற்றும் ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் என்பன இணைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.