சிறு, மத்திய நிலை ஆடை உற்பத்தித் தொழிற்சாலைகள் மூடப்படும் அபாயம்!
எரிபொருள் இன்மை மற்றும் மின்சார துண்டிப்பு உட்பட பல காரணங்களினால் சுமார் 200 சிறு மற்றும் மத்திய தர ஆடை உற்பத்தித் தொழிற்சாலைகள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பாரிய ஆடை உற்பத்தித் தொழிற்சாலைகள் சிபெட்கோ, ஐஓசி நிறுவனங்களுக்கு டொலர் செலுத்தி எரிபொருளை பெற்றுக்கொண்டாலும் சிறு மற்றும் மத்திய தர தொழிற்சாலைகள் வரிசையில் நின்று எரிபொருளைப் பெறுவதில் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குகின்றன என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் தொழிற்சாலை ஊழியர்கள் தமது சொந்த வாகனங்களில் பணிக்கு வருவதற்கும் எரிபொருள் இன்மையினால் தொழிற்சாலையின் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன என்று தொழிற்சாலை உரிமையாளர்கள் கவலை வௌியிட்டுள்ளனர்.
பாரியளவான உற்பத்தி தொழிற்சாலைகள் தமக்கு கிடைக்கும் கட்டளைகளில் ஒரு பகுதியை உப குத்தகையாக சிறு மற்றும் நடுத்தர உற்பத்தி தொழிற்சாலைகளுக்கு வழங்க முன்வருமாக இருந்தால் உற்பத்தித் தொழிற்சாலைகள் மூடப்படுவதை தடுக்க முடியும் என்றும் உரிமையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.