பரீட்சைக் கடமைகளில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு எரிபொருள் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை
க.பொ.த சாதாரண தர பரீட்சைக் கடமைகளில் ஈடுபடவுள்ள ஆசிரியர்களுக்கு அவசியமான எரிபொருளை அருகில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பரீட்சைக் கடமைகளை சரியான நேரத்திற்கு ஆரம்பிப்பதற்கு எரிபொருள் தட்டுப்பாடு பாரிய சவாலாக இருந்த நிலையில் அத்தியவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளர்களுக்கு குறித்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளார்.
அதற்கமைய, எதிர்வரும் 23ம் திகதி தொடக்கம் ஜூன் மாதம் முதலாம் திகதி வரை பரீட்சைக் கடமைகளில் ஈடுபடவுள்ள அதிபர் ஆசிரியர்கள் அருகிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தமது நியமனக்கடிதம் மற்றும் தேசிய அடையாள அட்டையை காட்டி தேவையான எரிபொருளைப் பெற்றுக்கொள்ள முடியும்.
பரீட்சை சேவைக்கான நியமனக் கடிதம் பெற்ற ஆசிரியர்கள் தமது சொந்த வாகனங்களில் கடமைக்கு சமூகமளிப்பார்களாயின் எதிர்வரும் 22ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 3.00 மணி தொடக்கம் 5.00 மணிவரை எரிபொருளைப் பெற்றுக்கொள்ள முடியும்.
எரிபொருள் இல்லாத காரணத்தினால் பரீட்சை கடமைகளில் ஈடுபடவுள்ள அதிபர் ஆசிரியர்களுக்கு போக்குவரத்து வசதிகளை வழங்குமாறு இலங்கை அரச ஆசிரியர்கள் சங்கம் பரீட்சை ஆணையாளர் நாயகத்திற்கு ஏற்கனவே கடிதம் அனுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.