தொடர்ச்சியான போராட்டத்தை ஆரம்பத்துள்ள பெரும் எண்ணிக்கையான தொழிற்சங்கங்கள்!
அலரிமாளிகைக்கு அருகாமையிலும் காலிமுகத்திடலிலும் அமைதியான முறையில் போராட்டம் நடத்தியவர்கள் மீது நேற்று (09) நடத்தப்பட்ட குண்டர் தாக்குதல்களுக்கு எதிராக நாடு தழுவிய ரீதியில் ஆர்ப்பாட்டங்களை நடத்தவுள்ளதாக பல தொழிற்சங்கங்கள் ஆரம்பித்துள்ளன.
சுகாதாரம், துறைமுகங்கள், கல்வி, நிருவாகசேவை, புகையிரதம் உட்பட பல முக்கிய துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 1,000க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் இன்று ஆரம்பிக்கப்டபட போராட்டத்திற்கு ஆதரவு வழங்கியுள்ளன.
நாடு முழுவதும் தொழிலாளர்கள் தங்கள் பணியிடங்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்துவார்கள் என்று தொழிற்சங்க செயற்பாட்டாளர் சமன் ரத்னபிரியா கூறினார். வார இறுதியில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி நீக்கம் செய்து புதிய அரசாங்கத்தை அமைக்குமாறு கோரி தொழிற்சங்கங்கள் பாராளுமன்றத்திற்கு பேரணியாக செல்லவுள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சுகாதாரத் துறையின் தொழிற்சங்கங்கள் நேற்று (09) நள்ளிரவு முதல் வேலைநிறுத்தத்தத்தை ஆரம்பித்துள்ளதாக தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் கூட்டமைப்பைச் சேர்ந்த ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கமும் இன்று காலை 8 மணி வரை தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையில், அவ்வமைப்பின் செயற்குழு, தொழிற்சங்க நடவடிக்கையை தொடர்வதா இல்லையா என்பதை இன்று (10) அவசர பொதுக் கூட்டத்தில் தீர்மானிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ரயில் திணைக்கள தொழிற்சங்கங்கள் நேற்று நள்ளிரவு தொடக்கம் பணிகளில் இருந்து விலகிக்கொண்டுள்ளதாக அறிவித்துள்ளன.
இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் சங்கம் (SLIEOA) நேற்று அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் கையில் கறுப்புப் பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும். இலங்கை நிருவாக சேவை சங்கம் தேசிய ரீதியில் மறு அறிவித்தல் வரை பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளது. அச்சங்கம் வௌியிட்டுள்ள அறிக்கையில் வன்முறையை கட்டவிழ்த்து விடும் வகையில் செயற்பட்ட அரசாங்கத்தின் செயலை கடுமையான கண்டனத்தை தெரிவிப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. நாடு மோசமான நிலைநோக்கி செல்வதை தவிர்ப்பதற்கு உடனடியாக பாராளுமன்றத்தை கூட்டுமாறும் சபாநாயகரிடம் கோரிக்கை விடுப்பதாகவும் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, மின்சாரசபை ஊழியர்களும் தொடர்ச்சியான போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக மின்சாரசபை ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பின் அழைப்பாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளது.
அதிபர் ஆசிரியர் தொழிற்சங்கங்களும் தொழிற்சங்க போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.