நிராயுதபாணி போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல் ஜனாநாயகம் மீதான அடி!
மக்கள் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் அவசரக்காலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டமையானது ஜனநாயகத்துக்குக் கிடைத்த மரண அடியெனச் சுதந்திர ஊடக இயக்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
அவசரகால நிலை என்ற போர்வையில், ஒன்று கூடும் மற்றும் எதிர்ப்பு தெரிவிக்கும் சுதந்திரம் கட்டுப்படுத்த வாய்ப்புகள் காணப்படுவதுடன், மேலும் பிற சட்ட ஏற்பாடுகளை விதிப்பதன் மூலம் பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தை பாதிப்புக்கு உட்படுத்தலாம்.
இது போன்ற நெருக்கடியான சூழ்நிலையில் மேற்கொள்ளவேண்டிய விடயமாகக் கருதப்படுவது, சுயாதீனமான பேச்சு சுதந்திரம் மற்றும் எதிர்ப்பு தெரிவிப்பதற்கான சந்தர்ப்பங்கள் அல்லது இடங்களை விரிவுபடுத்துவதாகும், மேலும் இது போன்ற அடக்குமுறை சட்டங்களைத் திணிப்பது பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் உள்ளிட்ட மக்களின் ஜனநாயக உரிமைகளை மீறும் செயற்பாடாகும்.
பொதுமக்களின் கோரிக்கையைப் பொருட்படுத்தாமல் அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்தியமைக்கு சுதந்திர ஊடக இயக்கம் தனது கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்ளுவதுடன், இந்த அடக்குமுறைச் சட்டத்தை உடனடியாக நீக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கைவிடுக்கின்றது.
இந்த விடயம் தொடர்பில் பாராளுமன்றத்திற்கும் பாரிய பொறுப்பு காணப்படுகின்றது. பிறப்பிக்கப்பட்டுள்ள அவசரகாலச் சட்டம் பத்து நாட்களுக்குள் நாடாளுமன்றத்தின் பெரும்பான்மையால் நிறைவேற்றப்பட வேண்டும், இல்லையெனில் 14 நாட்களுக்குள் அது வலிதற்றதாகும். நாடாளுமன்றம் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளபோதிலும், அடுத்த அமர்வில் குறித்த சட்டத்திற்கு ஒப்புதல் பெற அனுமதிக்காமல் அதை ரத்து செய்யும் அதிகாரம் பாராளுமன்றத்திற்கு காணப்படுகின்றது. ஆகவே, அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவசரகால சட்டத்தை எதிர்த்து, மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துமாறு சுதந்திர ஊடக இயக்கம் வேண்டிக்கொள்கின்றது.