அரச, அரச சார்பற்ற மற்றும் தனியார் துறை தொழிற்சங்கங்கள் இன்று(28) நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளன.
ஜனாதிபதி, பிரதமர் தலைமையிலான அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தியே இந்த பணிப்பகிஷ்கரிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நாடு தழுவிய ரீதியாக பல தொழிற்சங்கங்கள் இன்றைய தினம் பணிப்புறக்கணிப்பு மற்றும் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கவுள்ளன. இதற்கு பல அரச, தனியார் மற்றும் பெருந்தோட்ட தொழிற்சங்கங்கள் ஆதரவு வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளன.
துறைமுகம், தொடருந்து, சில சுகாதார சேவை சங்கங்கள், சுங்கத்தினர், ஆசிரிய அதிபர்கள் மற்றும் வர்த்தக சமூகத்தினர் தங்களது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.. இன்றைய போராட்டத்துக்கு தமது தரப்பினரும் ஆதரவு வழங்கவுள்ளதாக ஆசிரிய அதிபர் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. மக்களின் கோரிக்கைக்கு மதிப்பளித்து அரசாங்கம் பதவி விலக வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டார்.
இதேவேளை, தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஆதரவு வழங்குகின்ற போதிலும் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடப் போவதில்லையென அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளதாக அதன் மத்தியக்குழு மற்றும் ஊடகக்குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் குறிப்பிட்டார்.
இதேவேளை, நாடு முழுவதுமுள்ள அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களுக்கும், இன்றைய தினம் மரக்கறி விநியோகம் இடம்பெறமாட்டாது என அகில இலங்கை ஒன்றிணைந்த பொருளாதார மத்திய நிலைய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அத்துடன், இன்றைய தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், பெருந்தோட்டத் தொழிலாளர்கள் அனைவரும் ஒற்றுமையாக போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கோரியுள்ளது..
இன்றைய போராட்டம் சிறந்த எச்சரிக்கையாக அமையும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் குறிப்பிட்டார். மேலும் போராட்டத்துக்கு ஆதரவு வழங்குவதாக தெரிவித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அத்துடன் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் ஒருநாள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் இணைத் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் போரட்டத்திற்கு ஆதரவு வழங்கும் வகையிலும்,அரசாங்கத்திற்கு அழுத்தம் பிரயோகிக்கும் வகையிலும் 27 ஆம் திகதி நள்ளிரவு முதல் 28 ஆம் திகதி நள்ளிரவு வரை 24 மணிநேர அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ரயில்வே சங்கம் ஈடுபடுகின்றது.
மக்களின் போராட்டத்திற்கு வலுசேர்க்கும் வகையில் அரசியல் நோக்கமற்ற வகையில் 28 ஆம் திகதி வியாழக்கிழமை 17 தொழிற்சங்கத்தினரை ஒன்றிணைத்து அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுப்பட தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை துறைமுக சேவை சங்கத்தின் செயலாளர் நிரோஷன் கொரகாஹேன்ன தெரிவித்தார்.
அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் போராட்டத்திற்கு மதிப்பளித்து ஜனாதிபதி பதவி விலக வேண்டும். நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் மக்கள் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் வகையில் 28 ஆம் திகதி வியாழக்கிழமை கொலன்னாவ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து,பெற்றோலிய வளங்கள் கூட்டுத்தாபனம் வரை பேரணியாக சென்று எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுப்படுவதுடன், அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுப்படவும் தீர்மானித்துள்ளோம் என பெற்றோலிய வளங்கள் சேவை சங்கத்தின் செயலாளர் அசோக ரன்வெல தெரிவித்தார்.
நாட்டு மக்களின் கருத்திற்கு மதிப்பளித்து ஜனாதிபதி உட்பட முழு அரசாங்கமும் பதவி விலக வேண்டும். அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் வகையில் 28 ஆம் திகதி வியாழக்கிழமை பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளோம் என இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளர் மஹிந்த ஜாசிங்க தெரிவித்தார்.
காலி முகத்திடலில் முன்னெடுக்கப்படும் இளைஞர்களின் எழுச்சி போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் தொழிற்சங்கத்தினரது போராட்டத்தில் கலந்துக்கொள்வோம் என இலங்கை மின்சார சபை சேவை சங்கத்தின் தலைவர் ரஞ்ஜன் ஜயலால் தெரிவித்தார்.
போராட்டத்திற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவோம். பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுப்பட போவதில்லை என இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் அனில் ரஞ்சித் தெரிவித்தார்.