ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்கங்கள் இன்று நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பு
ஆசிரியர் மற்றும் அதிபர் தொழிற்சங்கங்கள் இன்று நாடளாவிய ரீதியில் அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுகின்றன.
எரிபொருள் விலை அதிகரிப்பினால் பஸ் கட்டணங்கள் மற்றும் பாடசாலை போக்குவரத்து கட்டணங்கள் அதிகரித்தமை மற்றும் அரசாங்கத்தின் பொதுமக்கள் எதிர்ப்பு திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த பணிப்பகிஷ்கரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதம செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்த ஒரு நாள் அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பில் அதிபர் – ஆசிரியர்களின் 30 தொழிற்சங்கங்கள் இணைந்துகொள்ளவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதம செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
ஆசிரியர்கள், அதிபர்கள் சார்பில் ஆசிரியர் தொழிற்சங்க கூட்டமைப்பு என்ற அடிப்படையில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு கல்வி அமைச்சிடமிருந்து சாதகமான பதில் கிடைக்கவில்லை என இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
கடந்த 18 ஆம் திகதி பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் எரிபொருள் விலை அதிகரித்ததுடன், போக்குவரத்து கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டதுடன் மேலும் பிரச்சினைகள் ஏற்பட்டன. இதுகுறித்து நாங்கள் கல்வி அமைச்சின் செயலாளருக்கு ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பு என்ற அடிப்படையில் எழுத்து மூலம் அறியப்படுத்தினோம். அதாவது இந்த நிலைமையை கவனத்தில் எடுத்து இந்தப் பிரச்சினையை எதிர்நோக்கியுள்ள ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தொடர்பில் தீர்மானம் எடுக்குமாறு நாங்கள் கேட்டிருந்தோம்.
குறிப்பாக ஆசிரியர்களை அருகிலுள்ள பாடசாலைக்கு இணைக்குமாறு கோரினோம். பெரும்பாலான ஆசிரியர்கள் எமக்கு இதுகுறித்து எண்ணிக்கையுடன் தகவல்களை வழங்கியிருந்தனர். தாங்கள் பாடசாலைகளுக்கு வரும் போது ஏற்படுகின்ற பிரச்சினை தொடர்பில் தெரிவித்திருந்தனர். அவர்கள் எரிபொருளுக்காக வரிசையில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி இருக்கின்றது. அதே நேரத்தில் அவ்வாறு வரிசையில் காத்திருந்து பெற்றுக்கொள்ளக்கூடிய எரிபொருளின் மூலம் அவர்களுக்கு ஒரு நாளைக்கு பாடசாலைக்கு சென்று வர முடியாத நிலை இருக்கின்றது.
இவ்வாறான நிலைமைக்கு மத்தியில், இந்த நிலைமைக்கு மாற்றுவழி அவசியமென்று கல்வி அமைச்சின் செயலாளரிடம் நாங்கள் எழுத்துமூலம் கோரியிருந்தோம். எனினும் நேற்றைய தினம் (நேற்றுமுனதினம் 21) வரையில் அதற்கு சாதகமான பதில் எமக்கு கிடைக்கவில்ல. தொலைபேசி மூலம் வினவியபோது எமது கோரிக்கையை நிராகரிக்கும் தன்மையே அவரிடம் காணப்பட்டது.
எனவே, தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டி நிலை எமக்கு ஏற்பட்டது. இதன்படி எதிர்வரும் 25ஆம் திகதி திங்கட்கிழமை நாங்கள் ஒருநாள் பணிப்புறக்கணிப்புக்கு செல்ல இருக்கின்றோம். எனவே தற்போதைய சந்தர்ப்பத்தில் நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்குரிய நிலைமை நிறைவடையும் வரையில் ஆசிரியர்களுக்கும் அதிபர்களுக்கும் நிவாரணம் வழங்கப்பட வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் நாங்கள் 25 ஆம் திகதி போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளோம். - என்றார்.
மேலும் செய்திகள்
காலிமுகத்திடல் போராட்டத்திற்கு வலுசேர்க்கும் தொழிற்சங்கங்களின் கரங்கள்
கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வால் பல இலட்சம் தொழிலாளர்கள் பாதிப்பு